சுவிட்சர்லாந்தில் கொலை குற்றங்களுக்கு 30 ஆண்டு காலவரம்பை நீக்க நடவடிக்கை
சுவிட்சர்லாந்தில் கொலை குற்றங்களுக்கு 30 ஆண்டு காலவரம்பை நீக்க நடவடிக்கை
சுவிட்சர்லாந்தில் கொலை குற்றங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 ஆண்டு காலவரம்பை (statute of limitations) நீக்குவதற்கான சட்ட மாற்றம் தற்போது அரசியல் மட்டத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில், சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான தேசிய சபை (National Council) இந்த காலவரம்பை நீக்குவதற்கு 109 வாக்குகள் ஆதரவாகவும், 73 வாக்குகள் எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு முன்பு மேல்சபையான மாநிலங்களின் சபை (Council of States) இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
இந்த சட்ட மாற்ற யோசனை சென்ட்கேலன் (St. Gallen) கன்டோனில் இருந்து முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சியின் அடிப்படையில் உருவானது. ஆனால் இந்த மாற்றம் அனைத்து ஆயுள் தண்டனைக்கு உட்பட்ட குற்றங்களுக்கு பொருந்தாது; குறிப்பாக கொலை குற்றங்களுக்கு மட்டுமே அது நடைமுறைக்கு வரும். மேலும் இளம் வயதினர் குற்றச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கு சுவிஸ் மக்கள் கட்சி (SVP) மற்றும் மையக் கட்சி (The Centre) ஆதரவு தெரிவித்தன. இறுதிக் கட்டத்தில் லிபரல் கட்சி (The Liberals)வும் இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக இணைந்தது. இதற்கு மாறாக இடதுசாரி கட்சிகளும் பசுமை லிபரல் கட்சியும் (Green Liberal Party) இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தேசிய சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மீண்டும் மேல்சபையான மாநிலங்களின் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு இறுதி முடிவு எடுக்கப்படும் நிலையில், சுவிட்சர்லாந்தில் கொலை குற்றங்களுக்கு காலவரம்பு நீக்கப்படுமா என்பது குறித்து அடுத்த கட்ட அரசியல் விவாதங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. WRS





