Swiss News In Tamil

வலைஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு: அத்தியாவசிய பொருட்களுக்கு தவிக்கும் மக்கள்

வலைஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு: அத்தியாவசிய பொருட்களுக்கு தவிக்கும் மக்கள்

சுவிட்சர்லாந்தின் வலைஸ் (Valais) மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு அபாயம் காரணமாக பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான பனி குவிந்துள்ளதால் பல சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், மலைப்பகுதிகளில் உள்ள சில கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்தும் பெரிதும் சிரமமானதாக மாறியுள்ளது.

குறிப்பாக செர்மாட் (Zermatt) மற்றும் சாஸ்-ஃபீ (Saas-Fee) போன்ற மலைப்பகுதிகளில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள குடியிருப்போர் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளூர் மிக்ரோஸ் (Migros) உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை அதிக அளவில் வாங்கி குவித்து வருகின்றனர். இதன் விளைவாக சில கடைகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரிகள் ஏற்கனவே காலியாகிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

N2a 6

பனிப்பொழிவு காரணமாக விநியோக வாகனங்கள் மலைப்பகுதிகளுக்கு முறையாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதும், தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட சூழல் உருவாகியிருப்பதும் இந்த அவசர வாங்குதலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சுற்றுலா முக்கியமாக சார்ந்திருக்கும் இந்த பகுதிகளில் குளிர்காலத்தில் இத்தகைய காலநிலை இடையூறுகள் புதிதல்ல என்றாலும், இம்முறை ஏற்பட்டுள்ள பனிச்சரிவு அச்சம் நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் இடையிடையே மின் தடைகள் ஏற்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கடைக்காரர்கள், சமைக்காமல் உடனே உண்ணக்கூடிய உணவுப்பொருட்கள், டின் உணவுகள் மற்றும் நீண்டகாலம் கெடாமல் பாதுகாக்கக்கூடிய பொருட்களை அதிக அளவில் விற்பனைக்கு வைத்துவருகின்றனர். வலைஸ் மாகாணத்தில் நிலவும் இந்த கடுமையான வானிலை சூழ்நிலை, உள்ளூர் விநியோக சங்கிலி மற்றும் அத்தியாவசிய சேவைகளின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Back to top button