A1 நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் மாற்றம்; லோசான்–ஜெனீவா திட்டம் தற்காலிக நிறுத்தம்
A1 நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் மாற்றம்; லவுசான் –ஜெனீவா திட்டம் தற்காலிக நிறுத்தம்
சுவிட்சர்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் Albert Rösti தனது முன்னுரிமைகளை தெளிவாக அறிவித்துள்ளார். அதன் படி, லவுசான்–ஜெனீவா (Lausanne–Geneva) இடையிலான A1 நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வராது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, ஆராவ் (Aarau) அருகிலும், ஜெனீவா நகரத்தை சுற்றியுள்ள பெர்லி (Perly) முதல் பெர்நெக்ஸ் (Bernex) வரையிலான பைபாஸ் பகுதியில் A1 நெடுஞ்சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது அடுத்த கட்ட வளர்ச்சி திட்டத்தில் பிரெஞ்சு பேசும் சுவிட்சர்லாந்தில் செயல்படுத்தப்பட உள்ள ஒரே சாலைத் திட்டமாகும். இதற்கான செலவு சுமார் ஒரு பில்லியன் சுவிஸ் ஃப்ராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், லவுசான்–ஜெனீவா நெடுஞ்சாலை திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை என்றும், அது தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கியுள்ளார். இந்தத் திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனில், புதிய மக்கள் வாக்கெடுப்பு ஒன்று அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரோமாண்டி பகுதி ரயில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க முதலீட்டை பெற்றுள்ளது. லேக் ஜெனீவா (Lake Geneva) சுற்றியுள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பாதைகள் மேம்படுத்துவதற்காக சுமார் 7 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்க் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெனீவாவின் முக்கிய ரயில் நிலையமான கார்னவின் (Cornavin) முழுமையான புதுப்பிப்பு பணிகளும் அடங்கும்.
சாலை மற்றும் ரயில் திட்டங்களில் இந்த மாற்றங்கள், எதிர்கால போக்குவரத்து தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளாக பார்க்கப்படுகின்றன.
© WRS





