Swiss News In Tamil

அணு மின் நிலையத்தை மூடிய சுவிட்சர்லாந்து : அதிக வெப்பநிலையால் தீர்மானம்

அணு மின் நிலையத்தை மூடிய சுவிட்சர்லாந்து : அதிக வெப்பநிலையால் தீர்மானம்

சுவிட்சர்லாந்தில் தற்போது நிலவும் கடும் வெப்பத்தால், ஆர்கவ் மாநிலத்தில் உள்ள பெஸ்‌னாவ் அணு மின் நிலையம் (Beznau Nuclear Power Plant) ஒன்று முக்கிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. Axpo எனும் நிறுவனம் நிர்வகிக்கும் இந்த மின் நிலையம், அதன் இரண்டு அணுசக்தி உலைகளில் ஒன்றை முழுமையாக நிறுத்தியுள்ளது, மேலும் மற்றொரு உலை அதிகபட்சம் 50% திறனில் மட்டுமே செயல்படுகிறது.

இந்த உலைகளின் இயங்குதிறன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குறைக்கப்பட்டிருந்தது. ஆனால், நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, ஆற்று நீரின் வெப்ப நிலை 25 டிகிரி செல்சியஸை நெருங்கியதால், ஒரு உலை முழுமையாக அணைக்க கட்டாயமாகியுள்ளது. இது குறித்த தகவலை  Axpo நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பெஸ்‌னாவ் அணு மின் நிலையம், Döttingen (டொட்டிங்கன்) பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின் சக்திக்கு தேவையான உலைகள், சூடான நீரை ஆரே ஆற்றிலிருந்து (Aare River) எடுத்து குளிர்வித்து மீண்டும் ஆற்றில் திருப்பி விடுகின்றன. இந்த முறைமையில், நீரின் வெப்பநிலை 25°C-ஐ கடந்துவிட்டால், ஆற்றில் வாழும் உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி உலை செயல்பாட்டை குறைக்க வேண்டும் என்ற உத்தரவு முன்னமே 2018 ஆம் ஆண்டு வெப்பஅலைக்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது.

அணு மின் நிலையத்தை

பெஸ்‌னாவ் மின் நிலையத்தில் cooling tower இல்லாததால், இது நேரடியாக ஆற்று நீரை பயன்படுத்தி உலைகளை குளிர்விக்கும் முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏனைய அணு மின் நிலையங்களில்  சிறப்பு cooling tower உள்ளதால், வெப்பநிலைக்கேற்ப செயல்பாட்டை எளிதாக மாற்ற முடிகின்றது. இந்த அணு மின் நிலையத்தின் செயல்திறனை குறைப்பதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதனால் சில நேரங்களில் மின் உற்பத்தி திறனில் குறைவு ஏற்படலாம் என்பதும் முக்கியமாக கவனிக்கப்படும் விடயமாகும்.

இந்நிலையில், வெப்பஅலை தொடர்ந்து நீடித்தால், இது போன்ற மின் நிலையங்களில் மேலும் செயல்திறன் குறைப்பு, அல்லது மின்விநியோகத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனடிப்படையில், அரசு மற்றும் மின் நிறுவனங்கள் இதனை பூர்த்தி செய்யும், மாற்று முயற்சிகளில் ஈடுபடுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

@20min

Related Articles

Back to top button