Swiss News In Tamil

லாங்ஷ்டிராஸ்ஸே பகலில் வாகன தடை – புதிய ஒளிரும் மாற்றுச் சிக்னல்கள் அமைப்பு

லாங்ஷ்டிராஸ்ஸே பகலில் வாகன தடை – புதிய ஒளிரும் மாற்றுச் சிக்னல்கள் அமைப்பு

சூரிக் நகரின் லாங்ஷ்டிராஸ்ஸே பகுதியில் அமலில் உள்ள பகல் நேர வாகனப் போக்குவரத்து தடையை இனி மேலும் தெளிவாக காட்டும் வகையில், ஒளிரும் மாற்றுச் சிக்னல்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகல் நேர வாகன தடை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ளது. இது முதன்முதலில் 2023 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரௌயர்‌ஷ்டிராஸ்ஸே மற்றும் டீனர்‌ஷ்டிராஸ்ஸே சந்திப்புகளில் இந்த மாற்றுச் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் லாங்ஷ்டிராஸ்ஸே பகுதியில் அமலில் உள்ள வாகன தடை ஓட்டுநர்களுக்கு தெளிவாகப் புரியும் என்றும், விதிமுறைகள் சிறப்பாக பின்பற்றப்படும் என்றும் நகர நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த மாற்றுச் சிக்னல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு சுமார் 3.6 இலட்சம் சுவிஸ் ஃப்ராங்க் செலவாகியுள்ளது.

சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், தானியங்கி போக்குவரத்து கணக்கீடுகள் மூலம் அந்தப் பகுதியில் ஊடாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதை Stadtpolizei Zürich கண்காணிக்கவுள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும், பகல் நேர வாகனத் தடையை மீறியதாக 3396 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

N8a

2023 செப்டம்பரில் இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, விரிவான தகவல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், பல ஓட்டுநர்கள் விதியை மீறியதாக நகர நிர்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, 2024 ஜூன் மாதத்தில் நகர நிர்வாக சபை மாற்றுச் சிக்னல் அமைப்பதற்கான முடிவை எடுத்தது. அதனைத் தொடர்ந்து, 2024 டிசம்பரில் நகர மன்றம் ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்க் அளவிலான மொத்த பட்ஜெட்டை அனுமதித்தது.

Stadt Zürich நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, லாங்ஷ்டிராஸ்ஸே பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான ஒரு கட்டமாகக் கருதப்படுகிறது.

© Stadt Zürich

Related Articles

Back to top button