Swiss News In Tamil

கட்டுக்கடங்காத ரசிகர்களின் வருகையால் களைகட்டிய புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026

கட்டுக்கடங்காத ரசிகர்களின் வருகையால் களைகட்டிய புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026

சுவிஸ் தமிழர் சமூகத்தின் முக்கியமான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றான புத்தாண்டும் புதுநிமிர்வும் 25வது தவையாக, ஜனவரி 1ஆம் தேதி வியாழக்கிழமை சுவிட்சர்லாந்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஆண்டின் விழாவாக கோலாகலமாக நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த விழா ஆரம்பத்திலையே அரங்கம் நிறைந்திருந்த காட்சிகளை காணமுடிந்தது.

விழாவின் ஆரம்ப நிகழ்வாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பின்னர் விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அணுசரணையாளர்களால் மங்களவிளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து இதுவரை காலமும் தாயகத்தில் யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் உயிர்நீத்த மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அரங்கில் நிறம்பியிருந்த அத்தனை உறவுகளும் எழுந்து நின்று தமது அகவணக்கத்தினை மேற்கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து வீணை இசையோடு ரசிகர்களை ஆட்கொண்ட அரங்கத்தின் ஆரம்ப நிகழ்வு தொடர்ந்து பல்வேறு தாயகப்பாடல் தென்னிந்தியப்பாடல் நடனம் மற்றும் இளம் கலைஞர்களின் அரங்கம் அதிரும் மேலைத்தேய நடனம், அதுமாத்திரமின்றி பரதநாட்டியம் உட்பட கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்று சுவிட்சர்லாந்து தமிழர் பாரம்பரியமும் ஒற்றுமையும் இன்னும் செழிப்போடு இருக்கிறது என்பதை பறைசாற்றி சென்றிருந்தது.

WhatsApp Image 2026 01 02 at 02.13.31 0a103f5a

விழாவின் ஆரம்பம் தொடக்கம் அரங்கம் நிறைந்திருந்தாலும் தொடர்ந்தும் பார்வையாளர்களின் வரவு அதிகரித்துக்கொண்டே சென்றமையால் ஏற்பாட்டுக்குழுவினர் அரங்கின் இரு மருங்கிலும், அதே போன்று மேடையில் முன் பகுதியிலும் மேலதிக ஆசனங்களை ஒழுங்கு செய்து ரசிகர்களை அன்போடு வரவேற்றார்கள்.

கிட்டத்தட்ட 2300 தொடக்கம் 2400 வரையான பார்வையாளர்களோடு நிறைந்திருந்த அரங்கத்தை தமது செந்தமிழால் வடம் பிடித்து தடம் பதித்து சென்றார்கள் இரு பெரும் ஆண் – பெண் மேடை அறிவிப்பாளர்கள். அது மாத்திரமின்றி புலத்தில் பிறந்து வளரும் இளம் கலைஞர்களின் மெய்சிலிர்க்கும் நடனங்களும் உணர்வெழிச்சியான தாயகப்பாடல்களும் ரசிகர்களை மெய் மறக்க வைத்திருந்தது.

காலத்தின் தேவையென கருதி ‘முதல்ல இத நிப்பாட்டுங்கோ’ என தலைப்பிட்டு அரங்கேற்றப்பட்ட நகச்சுவையுடன் கூடிய நாடகம் ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியையும் ஆழமான செய்தியையும் சொல்லிச்சென்றது.

என்னும் போல் அனுசரணையாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான கௌரவிப்புகளோடும் சாரங்கி இசையில் அதிரடி நேரடி இசையோடும் அரங்கம் முழு நிறைவை கண்டிருந்தது. மொத்தத்தில் சுவிஸ்தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 25வது தடவையாக சுவிஸ் தமிழர் வழங்கிய புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026 நிகழ்வு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரது இதயங்களிலும் ஆழமான றினைவுகளையும் பதித்து சென்றிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

 

Related Articles

Back to top button