Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து அரசு அமெரிக்கா பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து அரசு அமெரிக்கா பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவிற்குள் நுழையும் சுவிஸ் நாட்டவர்களின் மீதான நுழைவு சோதனைகள் கடுமையானவை என்ற தகவல்கள் இடைவிடாது எழுந்து வருகின்றன. சமீபத்தில், நியூயார்க்கில் ஒரு சுவிஸ் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம், சுவிஸ் அரசை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நியூயார்க்கு விமான நிலையத்தில் இறங்கிய 38 வயதுடைய சுவிஸ் பெண், ஆசிரியராக வேலை செய்து வருபவர். அவரை அங்கு உள்ள அமெரிக்க குடிபெயர்வு அதிகாரிகள் அரசாங்க அனுமதியின்றி வேலை செய்ய முனைந்ததாகக் கூறி கைது செய்தனர்.  குறித்த பெண் வேலைக்காக அல்ல, சுற்றுலா பயணமாக வந்தேன் என்று தொடர்ந்து விளக்கியும், அவரை 24 மணி நேரம் காவலில் வைத்தனர்.

இதனையடுத்து, அவர் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் (FDFA), அமெரிக்க அதிகாரிகளிடம் கடுமையான வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்து, “சுவிஸ் குடிமக்களின் மீதான கைது மோசமானது” என்று குற்றம்சாட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்து அரசு
சுவிட்சர்லாந்து அரசு

மேலும், சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தனது அமெரிக்க பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது. புதிய ஆலோசனையில், சுவிஸ் பயணிகள் அமெரிக்காவிற்குப் பயணிக்க முன்பாகவே, பேர்னில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தெளிவான நுழைவு, தங்கும் விதிமுறைகள் மற்றும் சட்டப் பிரிவுகள் குறித்து முறையாக தகவலறிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் படி, அமெரிக்காவிற்குள் பயணத்தின் போது விதிமுறைகளை மீறினால், அதிகாரிகள் கைது செய்ய, தங்கவைக்க, அபராதம் விதிக்க அல்லது நேரடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், சுவிஸ் மற்றும் பல ஐரோப்பிய நாட்டவர்கள் பயணத் தடைகள், விசா விதிகள், மற்றும் சுற்றுலாப்பயண அனுமதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியதைக் குறிக்கிறது. சுவிஸ் அரசு தற்போது தனது குடிமக்களை பாதுகாக்க, அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

@Keystone SDA

Related Articles

Back to top button