சூரிச்சில் இருந்து நியூயார்க் சென்ற Swiss விமானம் அவசரமாக தரையிறக்கம்
சூரிச்சில் இருந்து நியூயார்க் சென்ற Swiss விமானம் அவசரமாக தரையிறக்கம்

சூரிச்சில் இருந்து நியூயார்க் சென்ற Swiss விமானம் அவசரமாக தரையிறக்கம்…
சுவிட்சர்லாந்தின் தேசிய விமான சேவையான Swiss International Air Lines-க்கு சொந்தமான சூரிச்–நியூயார்க் விமானம், விமானத்திற்குள் புகை போன்ற அறிகுறி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவசரநிலை அறிவித்து அமெரிக்காவின் மேன் (Maine) மாநிலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு (சுவிஸ் நேரப்படி) இடம்பெற்றதாக விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
Airbus A330-300 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், திங்கட்கிழமை காலை 10.26 மணியளவில் சூரிச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நியூயார்க் நகரின் ஜான் எப். கென்னடி (JFK) சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்க கிழக்கு கடற்கரையை நெருங்கியபோது, திட்டமிடப்படாத வகையில் மேன் மாநிலத்தின் பாங்கோர் (Bangor) சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
இதுகுறித்து Swiss விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் மைக்கேல் பெல்சர் கூறுகையில், “பிஸ்னஸ் கிளாஸ் பகுதியின் முன்புறத்தில் புகை போன்ற ஒரு நிலைமை கண்டறியப்பட்டது. இதன் சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுபோன்ற சூழலில் பாதுகாப்பு நடைமுறைகளின்படி விமானிகள் உடனடியாக அருகிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதுடன், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அவசரநிலை அறிவிக்கும் சிக்னலையும் அனுப்புவார்கள்” என்றார்.
விமானம் எந்தவித கூடுதல் பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்பாக பாங்கோர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தீயணைப்பு படையினர் தயார்நிலையில் காத்திருந்தனர். விமானத்தை முழுமையாக பரிசோதித்த தீயணைப்பு அதிகாரிகள், தீப்பற்றியதற்கோ அல்லது அதிக வெப்பம் ஏற்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த 208 பயணிகளும், விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக Swiss நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பயணிகள் தங்களது பயணத்தை தொடரும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் புகை போன்ற அறிகுறி எதனால் ஏற்பட்டது என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. இதற்கான காரணத்தை கண்டறிய தொழில்நுட்ப நிபுணர்கள் விமானத்தை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.
விமான கண்காணிப்பு தரவுகளின்படி, அமெரிக்காவின் மேன் மாநிலக் கடற்கரையை அணுகியபோது, விமானக் குழுவினர் அவசரநிலையை குறிக்கும் சர்வதேச டிரான்ஸ்பாண்டர் குறியீடான 7700-ஐ அனுப்பினர். இந்த குறியீடு, விமானத்தில் உடனடி பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டிருப்பதை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்கும் உலகளாவிய அவசர சிக்னலாகும்.
ஒரு விமானம் 7700 குறியீட்டை அனுப்பியவுடன், அதற்கு வான்வழிப் போக்குவரத்தில் உயர்ந்த முன்னுரிமை வழங்கப்படும். விமானம் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தரையிறங்குவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஒருங்கிணைப்பார்கள்.





