சுவிஸ்-இத்தாலியர்களின் கோபம் உச்சத்தில்… தூதரக சேவைகள் மீண்டும் சர்ச்சையில்!
சுவிஸ்-இத்தாலியர்களின் கோபம் உச்சத்தில்... தூதரக சேவைகள் மீண்டும் சர்ச்சையில்!

சுவிஸ்-இத்தாலியர்களின் கோபம் உச்சத்தில்… தூதரக சேவைகள் மீண்டும் சர்ச்சையில்!
சுவிட்சர்லாந்தில் உள்ள இத்தாலிய தூதரகங்களின் சேவைகள் மீண்டும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நீண்ட காத்திருப்பு நேரம் மற்றும் தரமற்ற சேவை காரணமாக, இத்தாலிய-சுவிஸ் குடிமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளாக, தூதரகங்களில் நேரம் பெறுவதற்கே பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. கடந்த வாரமும், நிலைமை மீண்டும் மோசமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சுமார் 50 இத்தாலிய சங்கங்கள் இணைந்து மனு ஒன்றைத் தொடங்கியுள்ளதுடன், தூதரகங்களில் போதுமான பணியாளர்கள் இல்லை என குற்றஞ்சாட்டி, போராட்டத்திற்கும் திட்டமிட்டு வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு தற்போது ரோமில் உள்ள இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல என்று அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் மொத்தம் 14 ஊழியர்கள் தற்காலிகமாக சுவிட்சர்லாந்துக்கு மாற்றப்பட்டதாகவும், பேசல், சூரிச், ஜெனீவா மற்றும் லுகானோ தூதரகங்களில் கூடுதல் உள்ளூர் ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், மின்னணு அடையாள அட்டைகள் வழங்கும் சேவை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், 2026 இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 70 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்துக்கான இத்தாலிய தூதராக பணியாற்றிய ஜியான் லொரென்சோ கொர்னாடோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து ரோமுக்குத் திரும்பியுள்ளார். புதிய தூதர் நியமிக்கப்படும் வரை, லொரென்சோ க்ளூசர் இடைக்கால பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த விவகாரம், சுவிட்சர்லாந்தில் வாழும் இத்தாலிய குடிமக்கள் மத்தியில் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகிறது.





