Swiss News In Tamil
“படகு நிறைந்துவிட்டது” — சுவிஸ் வரலாறும் இன்றைய எச்சரிக்கையும்
“படகு நிறைந்துவிட்டது” — சுவிஸ் வரலாறும் இன்றைய எச்சரிக்கையும்
“படகு நிறைந்துவிட்டது” — சுவிஸ் வரலாறும் இன்றைய எச்சரிக்கையும்
சென்ற மாதம் (ஜூன் 2026) சுவிற்செர்லாந்தில் நடந்த ஒரு பொதுவாக்கெடுப்புப் பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும். இந்த நாட்டிலே வெளிநாட்டவரின் எண்ணிக்கை எல்லைதாண்டிப் போகிறது என்று கூக்குரல் இடுகிற அடிப்படைவாதக் கட்சிகள், அமைப்புகளின் ஒரு கோரிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
அதாவது 2050இற்கு முன்னர் சுவிஸின் சனத்தொகை ஒரு கோடியைத் தொடக்கூடாதென்றும் ஒருவேளை அது 9.5 மில்லியன் ஆகுமெனில் வெளிநாட்டவரின் வருகையைக் கட்டுப்படுத்தும் எல்லாவித நடவடிக்கைகளையும் சுவிஸ் மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்மொழிவுக்கான மக்கள் ஆணை வாக்கெடுப்பில் கோரப்பட்டது.
இறுதியில் 55 வீதமானோர் அதை எதிர்த்து வாக்களித்ததன் மூலம், அது தோற்கடிக்கப்பட்டது. ஆனால், 45 வீதமானோர் அதை ஆதரித்திருக்கிறார்கள் என்பதையே நான் உற்று நோக்குகிறேன். இன்னொரு பத்துவருடங்களில் அது அதிகரிக்கவும் கூடும்.
கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு நிலைமையை 1938, இரண்டாம் உலக யுத்த காலத்திலும் சுவிஸ் எதிர்கொண்டிருந்தது.

ஜெர்மனிய நாசிகள் ஐரோப்பாவைக் கைப்பற்றியபோது அவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்து சுவிஸிற்குள் நுழைந்த சுமார் 20,000க்கும் மேற்பட்ட யூத அகதிகளை அது எல்லையில் வைத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறது. அதை நியாயம் செய்ய “The boat is full” படகு நிறைந்துவிட்டது என்று வாதத்தை முன்வைத்தது.
அக்காலத்தில் நாசிப் படைகளால் சுவிஸ் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஹிட்லருக்கு அப்படியொரு நோக்கம் இருந்ததாகவும், Operation Tannenbaum என்ற பெயரில் யுத்த ஏற்பாடுகளுக்கு தயாராக இருந்ததாகவும் அண்மையில் அறிந்துகொண்டேன். தாக்குதலுக்கு 3 முதல் 5 லட்சம் வரையான ராணுவ வீரர்களைப் பயன்படுத்தும் யுத்த வரைபடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. வடக்கே ஜெர்மனியிலிருந்தும் தெற்கே இத்தாலியிலிருந்தும் ஒரே நேரத்தில் நுழைவது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது.
ஹிட்லர் சுவிஸின் நடுநிலைக் கொள்கையை இழிநிலையென்று வெறுத்து கருத்துக்களையும் கூறியிருக்கிறார். இயற்கையில் யாருமே நடுநிலையானவர்கள் அல்ல என்ற அர்த்தப்பட சுவிஸ் செயற்கையாகச் செய்யப்பட்ட நாடு என்று கூறியிருக்கிறார். எவ்வாறாயினும் தாக்குதலைத் தொடங்கும் உத்தரவை அவர் பிறப்பிக்கவே இல்லை. அதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். இங்கிருக்கிற பாலங்களையும் சுரங்கங்களையும் வெடிவைத்துத் தகர்த்துவிட்டால் நாசி ராணுவத்தினர் தனித் தனி தீவுகளாக நிலை குலைவர் போன்ற ராணுவ ரீதியிலான காரணங்களும் உண்டு.

பணம், தங்கம் போன்றவற்றை சுவிஸ் வங்கிகள் பரிவர்த்தனை செய்துகொண்டிருந்தமை ஏதோவொரு வகையில் ஜெர்மனிக்கு பயனுள்ளதாக இருந்தது போன்ற காரணங்களும் உண்டு. நாசிப் படைகள் கடைசிவரை சுவிற்செர்லாந்துக்குள் நுழையவில்லை, யுத்தம் எல்லைகளில் நடக்கவில்லை என்றாலும், சுவிஸ் யூத அகதிகள் உள் நுழைவதை தடுத்துக்கொண்டே இருந்தது. அதற்கு ஜெர்மனியைத் தூண்டிவிடக் கூடாது என்பதுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
இந்தச் சூழலின் பின்னணியில் சுவாரசியமான ஒரு மனிதரைத் தெரிந்துகொண்டேன். அவருடைய பெயர் Paul Grüninger. அக்காலத்தில் St Gallen மாநில பொலிஸ் அதிகாரி. அவர் நிர்க்கதியாகி எல்லைக்கு வந்த யூத அகதிகளின் ஆவணங்களில் அடையாளங்களை மாற்றியும், உள்நுழைவுத் திகதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தியும் சுமார் 3000 – 4000 பேரை சுவிற்சர்லாந்துக்குள் திருட்டுத் தனமாக நுழைய வைத்தார்.
ஒரு கட்டத்தில் அதைக் கண்டுபிடித்த சுவிஸ் நீதிமன்றம் அவரைத் தேசத் துரோகி என்று குற்றம் சுமத்தியது. அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருடைய ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. ஒதுக்கப்பட்டார். 1972 இல் 80 வயதில் அவர் இறந்தபோது வறுமையில் வாடிப்போய் இருந்தார்.
மறுபடியும் 1995இல் அவர் இங்கே பேசுபொருளானார். அவருக்கு ஆதரவான பொதுமக்களின் கருத்துகள், வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு, அவர் செய்தது அதிகார துஷ்பிரயோகம் அல்ல, அது மனிதாபிமானச் செயல் என்பதை அதே நீதிமன்று உறுதி செய்தது. அவர் மீதான குற்றத் தீர்ப்பை நீக்கியது. அவர் தேசத் துரோகி அல்ல, தியாகியே என்று சட்டரீதியாகத் தூய்மைப்படுத்தப்பட்டது. குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
இவ்வாறாக, ஒரு துரோகி, தியாகி ஆவதற்கு 55 ஆண்டுகள் ஆயிற்று.
சுவிசில் இருந்து எழுத்தாளர் சயந்தன் கதிர் அவர்கள் எழுதிய இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
சுவிசில் இருந்து எழுத்தாளர் சயந்தன் கதிர் அவர்கள் எழுதிய
இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். 





