Swiss News In Tamil

‘10 மில்லியன் வேண்டாம்’ முன்முயற்சி தோல்வி; ஆனால் குடியேற்றம் மீதான அச்சம் நீடிக்கிறது

N9 3

‘10 மில்லியன் வேண்டாம்’ முன்முயற்சி தோல்வி; ஆனால் குடியேற்றம் மீதான அச்சம் நீடிக்கிறது

சுவிட்சர்லாந்தில் பெரும் அரசியல் கவனத்தை ஈர்த்திருந்த “10 மில்லியன் மக்கள் தொகைக்கு இல்லை” என்ற மக்கள் முன்முயற்சி வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், ஆதரவாக பதிவான வாக்குகளின் வலிமை கூட்டாட்சி அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே இந்த முன்முயற்சி தோல்வியடைந்தது உறுதியாகியது. காரணம், சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறையின்படி, ஒரு மக்கள் முன்முயற்சி வெற்றி பெற மக்கள் பெரும்பான்மையுடன் கன்டோன்களின் பெரும்பான்மை ஆதரவும் அவசியம். பல கன்டோன்களின் இறுதி முடிவுகள் வெளியாகும் முன்னரே, தேவையான கன்டோன் ஆதரவைப் பெற முடியாது என்பது தெளிவாகிவிட்டது.

இறுதி முடிவுகளின்படி, 13 கன்டோன்கள் இந்த முன்முயற்சியை நிராகரித்துள்ளன. தேசிய அளவில் 53 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

N9 3

இந்த முடிவு கூட்டாட்சி அரசுக்கு நிம்மதியை அளித்திருந்தாலும், குடியேற்றம் தொடர்பான மக்களின் அச்சங்களையும் கவலைகளையும் குறைக்கும் வகையில் அரசு இன்னும் அதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வாக்கு முடிவுகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டையும் வெளிப்படுத்தியுள்ளன. நகரங்களில் வாழும் மக்கள் இந்த முன்முயற்சியை பெருமளவில் நிராகரித்துள்ளனர். குறிப்பாக ஜெனீவா (Genève) கன்டோனில் 65 சதவீத வாக்காளர்கள் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதேவேளை, பல கிராமப்புற கன்டோன்களில் இந்த முன்முயற்சிக்கு வலுவான ஆதரவு காணப்பட்டது.

இதனுடன் நடைபெற்ற மற்றொரு தேசிய வாக்கெடுப்பில், சிவில் சேவை (Civilian Service) தொடர்பான கடுமையான புதிய விதிமுறைகளுக்கு மக்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். சுமார் 53 சதவீத வாக்காளர்கள் இந்த மாற்றங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இருப்பினும், பிரெஞ்சு மொழி பேசும் மேற்கு சுவிட்சர்லாந்தின் பல கன்டோன்கள் இந்தச் சட்ட மாற்றத்தை பெரும்பான்மையாக நிராகரித்துள்ளன.

புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம், கட்டாய இராணுவ சேவையிலிருந்து விலகி சிவில் சேவைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும். ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களின் பின்னணியில், இந்த மாற்றம் இராணுவத்தின் மனிதவளத்தை வலுப்படுத்தும் என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

புதிய சட்டத்தின் கீழ், சிவில் சேவைக்குத் விண்ணப்பிப்போர் கடுமையான நிபந்தனைகளையும் நீண்டகால சேவைப் பொறுப்புகளையும் ஏற்க வேண்டியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *