க்ராய்ஸ்லிங்கன்–கொன்ஸ்டான்ஸ் சந்தை மீண்டும் திறப்பு; வெடிகுண்டு அச்சுறுத்தல் எச்சரிக்கை நீக்கம்
க்ராய்ஸ்லிங்கன்–கொன்ஸ்டான்ஸ் சந்தை மீண்டும் திறப்பு; வெடிகுண்டு அச்சுறுத்தல் எச்சரிக்கை நீக்கம்

க்ராய்ஸ்லிங்கன்–கொன்ஸ்டான்ஸ் சந்தை மீண்டும் திறப்பு; வெடிகுண்டு அச்சுறுத்தல் எச்சரிக்கை நீக்கம்
துர்காவ் கன்டோனில் உள்ள க்ராய்ஸ்லிங்கன் (Kreuzlingen) மற்றும் ஜெர்மனியின் கொன்ஸ்டான்ஸ் (Konstanz) நகரங்களுக்கு இடையில் நடைபெற்று வந்த 24 மணி நேர எல்லைத் தாண்டிய சந்தை, வெடிகுண்டு அச்சுறுத்தலால் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து சந்தைப் பகுதி முழுமையாக காலி செய்யப்பட்டது. இருப்பினும், மதியம் 12:15 மணிக்குப் பின்னர் ஜெர்மன் பாதுகாப்புப் படையினர் அவசரநிலை முடிவடைந்ததாக அறிவித்து, அதிகாலை முதல் அமலில் இருந்த பாதுகாப்பு தடைகளை நீக்கியதாக துர்காவ் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கொன்ஸ்டான்ஸ் போலீசாருக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் சந்தைப் பகுதியில் பல வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் துர்காவ் கன்டோனல் போலீசார் எல்லைப் பகுதியில் “அச்சுறுத்தல் நிலை” ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியிருந்தாலும், பொதுமக்களுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தனர். சுவிஸ் மற்றும் ஜெர்மன் அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் 24 மணி நேர புழக்கப் பொருள் சந்தை (Flea Market), க்ராய்ஸ்லிங்கன் மற்றும் அருகிலுள்ள ஜெர்மன் நகரமான கொன்ஸ்டான்ஸ் ஆகிய இரு நகரங்களிலும் இணைந்து நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். அதன் எல்லைத் தாண்டிய தன்மையின் காரணமாக, ஜெர்மன் பகுதி மட்டுமன்றி க்ராய்ஸ்லிங்கனின் சில பகுதிகளும் காலி செய்யப்பட்டு பொதுமக்கள் நுழைவு தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கொன்ஸ்டான்ஸ் தொடருந்து நிலையமும் பாதிக்கப்பட்டது. இதனால் க்ராய்ஸ்லிங்கன் மற்றும் கொன்ஸ்டான்ஸ் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
சுவிட்சர்லாந்து கூட்டாட்சி தொடருந்து நிறுவனம் (SBB) தனது இணையதளத்தில், “ஜெர்மனியில் இடம்பெற்ற ஒரு சம்பவம்” காரணமாக இந்த தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையில், ஜெர்மன் அதிகாரிகளின் விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன. வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.






