சூரிக் கன்டோனில் தங்கம் விற்பனை நிகழ்வுகளில் மோசடி: மூவர் மீது நடவடிக்கை சுவிட்சர்லாந்தின் சூரிக் கன்டோன் பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் தங்கம் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் நிகழ்வுகளில் கண்காணிப்பு மேற்கொண்ட போலீசார் இரு பேரை கைது செய்ததுடன், மேலும் ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். ட்யூபென்டார்ஃப் நகரில் மார்ச் 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தங்கம் வாங்கும் நிகழ்வுகளில் Kantonspolizei Zürich அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளின் போது பல சட்டவிரோத செயல்கள் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட வீட்டு சோதனைகளில் ஆயிரக்கணக்கான யூரோ மற்றும் சுவிஸ் ஃப்ராங்குகள், மேலும் நகைகள் மற்றும் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம் வாங்கும் போது மோசடி மற்றும் அதிக விலை சுரண்டல் (Wucher) செய்ததாக சந்தேகிக்கப்படும் 25 மற்றும் 26 வயதுடைய இரு ஜெர்மன் நாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டு, அரச வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான “மதிப்புமிக்க உலோக கட்டுப்பாட்டு அதிகார ” (Edelmetallkontrolle) அனுமதி இல்லை என்பதுடன், “மதிப்புமிக்க உலோக கட்டுப்பாட்டு அதிகார”(EMGK) சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டிய பதிவேடு மற்றும் ஆவண பராமரிப்பு விதிகளையும் பின்பற்றவில்லை என தெரியவந்துள்ளது. இதனுடன் தொடர்பாக, அஃபோல்டெர்ன் ஆம் ஆல்பிஸ் பகுதியில் மார்ச் 26 அன்று நடைபெற்ற மற்றொரு தங்கம் வாங்கும் நிகழ்விலும் போலீசார் மற்றும் கன்டோனல் அளவைத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். அங்கு 29 வயதுடைய ஜெர்மன் நாட்டு நபர் ஒருவரும் சட்டவிரோதமாக தங்கம் வாங்கியதாக கண்டறியப்பட்டது. அந்த நபருக்கும் மதிப்புமிக்க உலோக கட்டுப்பாட்டு அதிகார அனுமதி இல்லை என்பதுடன், ரசீதுகள் வழங்குதல் உள்ளிட்ட ஆவண பராமரிப்பு விதிகளையும் மீறியுள்ளார். மேலும், அவரிடம் செல்லுபடியாகும் வேலை அனுமதியும் இல்லாததுடன், வணிக நடவடிக்கைகள் குறித்து சரியான கணக்குப் பதிவு மேற்கொள்ளப்படவில்லை என்பதும் அதிகாரிகள் கண்டறிந்தனர். சம்பவ இடத்திலேயே போலீசார் சுமார் 80 கிராம் தங்கமும், ஆயிரக்கணக்கான பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்வு உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் தங்கம் வாங்கும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மோசடி மற்றும் அனுமதியற்ற வணிக செயல்பாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமையான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்களது நகைகளை விற்கும் முன், உரிய அனுமதி பெற்ற வணிகர்களைத் தேர்வு செய்வதும், சரியான ரசீது மற்றும் ஆவணங்களை பெறுவதும் மிக அவசியம் என அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர். Kapo ZH