‘SMS blaster’ மூலம் நடக்கும் பார்க்கிங் மோசடி.!! சுவிஸில் இப்படியும் நடக்கிறதா.? ஒரு சாதாரண நாள். நீங்கள் உங்கள் காரை நகரத்தில் நிறுத்தி விட்டு, உங்கள் வேலையில் பிஸியாக இருக்கிறீர்கள். சில நிமிடங்களில் உங்கள் மொபைலில் ஒரு SMS வருகிறது. “உங்கள் பார்க்கிங் அபராதம் நிலுவையில் உள்ளது. CHF 40 உடனே செலுத்தவும்.” சாதாரணமாக தோன்றும் இந்த ஒரு செய்தி… அதுவே ஒரு பெரிய குற்ற வலையின் தொடக்கம். நீங்கள் வேலை பிசியில் அந்த அபராதத்தை செலுத்திவிடலாம் என்றென்னி செலுத்த ஆரம்பித்தால் உங்கள் வங்கியில் இருந்த பணம் அத்தனையும் காலியாகும்.. ஆம் இது சுவிசில் இடம்பெறும் பாரிய மோசடி.! அது என்ன எப்படி நடக்கிறது என்பது பற்றிய முழுமையான விபரங்களை அறிய கடைசிவரை பாருங்க.. வணக்கம். சுவிட்சர்லாந்தில் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு தொழில்நுட்ப அடிப்படையிலான மோசடி வழக்கை பற்றிய முழுமையான தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன். ஜெனீவா (Geneva) மற்றும் பாரிஸ் (Paris) நகர போலீசார் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், பார்க்கிங் அபராதம் என்ற பெயரில் நடைபெற்ற பெரிய அளவிலான மோசடி வலையில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்ந்து விரிவடைந்து வந்துள்ளது. தற்போதைய விசாரணையில் இந்தக் கணக்கில் தெரியவந்துள்ளது — இது தனிநபர் அளவிலான மோசடி அல்ல, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் குழுவின் செயல். இந்த மோசடி முறையின் மையத்தில் இருக்கும் முக்கிய கருவி ‘SMS blaster’ ஆகும். பொதுவாக bulk SMS அனுப்ப பயன்படும் இந்த சாதனம், குற்றவாளிகளால் முற்றிலும் வேறுபட்ட விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இதை ஒரு போலியான மொபைல் டவர் போல செயல்படுமாறு அமைத்துள்ளனர். இதன் மூலம் அருகிலுள்ள மொபைல் போன்களின் சிக்னல்களை தற்காலிகமாக தங்களது சாதனத்துடன் இணைக்க வைக்கின்றனர். அந்த நேரத்தில், பயனரின் மொபைல் உண்மையான network-இல் இல்லை என்பதை அறியாமல், குற்றவாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. இதனால் அவர்கள் அனுப்பும் SMS, அதிகாரப்பூர்வமாக வந்தது போல தோன்றுகிறது. விசாரணையில் வெளிவந்த தகவல்களின் படி, இந்த குற்றவாளிகள் மக்கள் அதிகம் கூடும் நகர மையங்கள், பார்க்கிங் இடங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளை இலக்காக எடுத்துள்ளனர். வாகனங்களில் மறைத்து வைத்திருந்த ‘SMS blaster’ சாதனங்களின் மூலம் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மொபைல்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அந்த செய்திகளில் “உங்கள் பார்க்கிங் அபராதம் நிலுவையில் உள்ளது — CHF 40 உடனடியாக செலுத்தவும்” என்ற தகவல் இடம் பெற்றுள்ளது. அதனுடன் QR code அல்லது இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த QR code-ஐ scan செய்தவர்கள், உண்மையான அரசு அல்லது பார்க்கிங் அதிகாரப்பூர்வ தளத்தைப் போன்ற தோற்றமளிக்கும் போலியான இணையதளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் payment விவரங்களை உள்ளிட்டதும், பணம் நேரடியாக குற்றவாளிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முறையில், 2 மில்லியன் சுவிஸ் பிராங்கிற்கு மேல் பணம் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த மோசடி மிகவும் ஆபத்தானது என்று போலீசார் வலியுறுத்துவதற்கான காரணம், அதன் உளவியல் நுட்பத்தில் இருக்கிறது. SMS நேரடியாக தனிப்பட்ட மொபைலுக்கு வரும் போது, மக்கள் அதனை எளிதில் நம்புகிறார்கள். மேலும், அதிகாரப்பூர்வ மொழி, logo போன்றவை பயன்படுத்தப்படுவதால் சந்தேகம் குறைகிறது. QR code மூலம் payment செய்யும் வசதி, இது ஒரு நவீன மற்றும் நம்பகமான சேவையாக தோன்றச் செய்கிறது. முக்கியமாக, CHF 40 போன்ற குறைந்த தொகை என்பதால், பலர் சரிபார்க்காமல் உடனடியாக பணம் செலுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து போலீசார் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசு அல்லது அதிகாரப்பூர்வ அமைப்புகள் SMS மூலம் அபராதம் கேட்பது அரிது என்பதால், எந்த தகவலும் வந்தாலும் உடனடியாக நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர். குறிப்பாக, அறியாத link அல்லது QR code-ஐ திறக்காமல் இருக்க வேண்டும். Website முகவரி சரியானதா என்பதை சரிபார்க்க வேண்டும். சந்தேகமான நிலை இருந்தால், நேரடியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகி உறுதி செய்ய வேண்டும். இறுதியாக, இந்த வழக்கு நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், குற்றவாளிகள் நேரடியாக உங்கள் முன் வருவதில்லை. அவர்கள் உங்கள் மொபைல் திரையில் ஒரு செய்தியாக வருகின்றனர். ஒரு SMS, ஒரு link, ஒரு QR code — இவை அனைத்தும் இன்று ஒரு மோசடியின் கதவாக மாறியுள்ளன. எனவே, விழிப்புணர்வு மட்டுமே உங்கள் பாதுகாப்பாகும். இது உங்கள் குற்றமும் பின்னணியும் செய்தி அறிக்கை. தொடர்ந்து மேலும் உண்மைகளுடன் மீண்டும் சந்திப்போம்.