Swiss News In Tamil

வெனிசுலா ஜனாதிபதியின் சொத்துகள் முடக்கம்: சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு

வெனிசுலா ஜனாதிபதியின் சொத்துகள் முடக்கம்: சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு

வெனிசுலா ஜனாதிபதி Nicolás Maduro மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் அனைத்து சொத்துகளையும் சுவிட்சர்லாந்தில் முடக்குவதாக Switzerland அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து உருவான சர்வதேச அரசியல் சூழலின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் மீது கடும் விமர்சனங்களும், சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன; அதே நேரத்தில் சில நாடுகள் எதிர்ப்பும் பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நிக்கோலஸ் மதுரோ அல்லது அவருடன் நேரடி அல்லது மறைமுக தொடர்புடைய நபர்கள் சுவிட்சர்லாந்தில் வைத்திருக்கும் எந்தவொரு சொத்தும் உடனடியாக முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை நான்கு ஆண்டுகள் காலத்திற்கு இது செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

N2b

மேலும், சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் எதுவும் கண்டறியப்பட்டால், அவை வெனிசுலா மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் வகையில் தேவையான அனைத்து உதவிகளையும் சுவிட்சர்லாந்து அரசு வழங்கும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், சட்டவிரோத சொத்துகள் எதுவும் சுவிட்சர்லாந்திலிருந்து வெளிநாடுகளுக்கு மாற்றப்படாத வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வெனிசுலாவில் நீடித்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் இந்தப் போன்ற நடவடிக்கைகள் அந்த நாட்டின் அரசியல் எதிர்காலத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

© KeystoneSDA

Related Articles

Back to top button