சுவிட்சர்லாந்தில் குப்பை கொட்டினால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான அபராதம்
சுவிட்சர்லாந்தில் குப்பை கொட்டினால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான அபராதம்

சுவிட்சர்லாந்தில் குப்பை கொட்டினால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான அபராதம்…
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் குப்பைகளை அசுத்தமாக வீசுபவர்களுக்கு இனி நாடு முழுவதும் ஒரே மாதிரியான அபராத முறை அமலுக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் இந்த புதிய நடைமுறை நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அரசு (Federal Council) அறிவித்துள்ளது.
இதுவரை சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு நகராட்சி மற்றும் பிராந்தியமும் தங்களது உள்ளூர் விதிமுறைகளின் அடிப்படையில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தன. இதனால் ஒரு இடத்தில் 100 சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டால், மற்றொரு இடத்தில் அதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அபராதம் விதிக்கப்படும் நிலை காணப்பட்டது.

இந்த வேறுபாட்டை நீக்கி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய தேசிய அபராத முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை அசட்டையாக வீசினாலோ அல்லது அதிகளவு வீட்டுக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டினாலோ, அதிகபட்சமாக 250 சுவிஸ் பிராங்க் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது கொட்டப்பட்டுள்ள குப்பையின் வகை மற்றும் அதன் அளவைப் பொறுத்து தீர்மானிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிய அளவிலான குப்பை முதல் பெருமளவு நகர்ப்புற கழிவுகளை சட்டவிரோதமாக அகற்றும் சம்பவங்கள் வரை இந்த புதிய விதிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனுடன், தேவையற்ற கழிவுகளை முடிந்தவரை குறைப்பதும், தவிர்க்க முடியாத கழிவுகளை முறையாக மறுசுழற்சி (Recycling) செய்வதும் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்றும் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகரங்களின் தூய்மை மற்றும் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய தேசிய அபராத முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





