சுவிட்சர்லாந்தில் முவோடதால் பகுதியில், மலைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை மாலை, பிராகல்ஸ்ட்ராஸ் சாலையில் கீழ்நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் விலகியது. பின்னர், சுமார் 60 மீட்டர் ஆழமான சரிவில் உருண்டு விழுந்த கார், தலைகீழாக நின்றது.
மாலை 5 மணி 5 நிமிடத்திற்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, கடினமான மலைப்பகுதி என்பதால், ரெகா-வின் இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

65 வயதான ஓட்டுநர் காருக்குள் சிக்கிய நிலையில் மீட்புக் குழுவினரால் வெளியே கொண்டுவரப்பட்டார். 69 வயதான பயணி தானாகவே வாகனத்திலிருந்து வெளியேறியிருந்தார். இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ரெகா ஹெலிகாப்டர்கள் மூலம் மாகாணத்திற்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர்.
மீட்புப் பணிகளும், ஆரம்பகட்ட விசாரணைகளும் நடைபெற்றதால், பிராகல்ஸ்ட்ராஸ் சாலை சுமார் இரண்டரை மணி நேரம் முழுமையாக மூடப்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதால், அந்தப் பகுதியில் மேலும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த மீட்புப் பணியில் ஷ்விட்ஸ் மாகாண காவல்துறை, ஷ்விட்ஸ் மற்றும் முவோடதால் தீயணைப்புப் படைகள், மேலும் ரெகா மீட்புக் குழுவினர் இணைந்து செயல்பட்டனர்.
இந்த விபத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து ஷ்விட்ஸ் மாகாண காவல்துறையும், அரசு வழக்கறிஞர் அலுவலகமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.



