விமானத்தில் அதிர்ச்சி! பயணியின் அருகே வைக்கப்பட்ட சடலப் பை – சுவிஸ் நபரின் பகீர் அனுபவம்!
விமானத்தில் அதிர்ச்சி! பயணியின் அருகே வைக்கப்பட்ட சடலப் பை – சுவிஸ் நபரின் பகீர் அனுபவம்!

விமானத்தில் மெக்கா புனிதப் பயணத்தை முடித்துவிட்டு சுவிட்சர்லாந்து திரும்பிய ஒருவருக்கு, மறக்க முடியாத அதிர்ச்சியான அனுபவம் ஒன்று விமானத்தில் ஏற்பட்டுள்ளது.
வோட் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயது நபர், கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஜெட்டாவிலிருந்து ஜெனீவா நோக்கிச் சென்ற சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்திருந்தார்.
அவரது தகவலின்படி, பயணத்தின் ஆரம்பம் அமைதியாக இருந்தது. ஆனால் விமானத்தில் உணவு வழங்கப்பட்ட பின்னர், முன்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில், ஒரு பயணி வேறு இருக்கைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் விமானப் பணியாளர்கள் பெரிய கருப்பு நிற சடலப் பையை கொண்டு வந்து, அந்த 30 வயது பயணியின் அருகிலிருந்த காலி இருக்கைகளில் வைத்ததாகக் கூறப்படுகிறது.
முதலில் என்ன நடந்தது என்பது புரியாத நிலையில் இருந்த அவர், பின்னர் அருகில் இருந்த பயணிகளின் உரையாடலின் மூலம் அந்தப் பையில் இறந்த ஒருவரின் உடல் இருப்பதை அறிந்ததாக தெரிவித்துள்ளார்.
அதன்பின், இறந்தவரின் உறவினர் ஒருவருக்கு பல பயணிகள் ஆறுதல் தெரிவித்தனர். ஒரு இமாமும் அவரிடம் பேசி, அடுத்தகட்ட இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.

கிடைத்த தகவல்களின்படி, இறந்தவர் பிரான்சின் லியோன் நகரைச் சேர்ந்த கடுமையாக நோய்வாய்ப்பட்ட ஒருவர். இறப்பதற்கு முன்பு மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற தனது இறுதி விருப்பத்தை அவர் நிறைவேற்றியிருந்தார்.
இருப்பினும், தனது அருகில் சடலப் பை வைக்கப்பட்டிருந்த சூழல் தனக்கு மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தியதாக அந்த சுவிஸ் பயணி தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் விமானம் தரையிறங்கிய பிறகு, காவல்துறையினரும் மருத்துவக் குழுவினரும் விமானத்தில் ஏறி விசாரணை நடத்தினர். பின்னர் அது இயற்கையான மரணம் என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.






