வலைஸ் கன்டோனில் பள்ளி ஒழுங்கு சிக்கல்களுக்கு புதிய திட்டம்
வலைஸ் கன்டோனில் பள்ளி ஒழுங்கு சிக்கல்களுக்கு புதிய திட்டம்

வலைஸ் கன்டோனில் பள்ளி ஒழுங்கு சிக்கல்களுக்கு புதிய திட்டம்
சுவிட்சர்லாந்தின் வலைஸ் (Vaud) கன்டோன் அரசு, பள்ளிகளில் அதிகரித்து வரும் ஒழுங்கு மீறல்கள் மற்றும் கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களால் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க புதிய நடவடிக்கை திட்டத்தை அறிவித்துள்ளது.
சமீப காலமாக மாணவர்களின் ஒழுங்கின்மை, பாட நேர இடையூறுகள் மற்றும் வகுப்பறைகளில் ஏற்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து ஆசிரியர்களிடமிருந்து அதிகளவிலான புகார்கள் எழுந்து வந்தன. இதனால் கற்பித்தல் சூழல் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் கல்வித் தரம் குறைவடைவதாகவும் கவலை வெளியிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், 2028ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் “சிறப்பு ஆதரவு அறை” (resource space) அமைக்கப்படும் என வலைஸ் கல்வி அமைச்சர் பிரெடெரிக் போர்லோஸ் (Frédéric Borloz) அறிவித்துள்ளார்.
இந்த அறைகளில் சிறப்பு பயிற்சி பெற்ற நிபுணர்கள் பணியமர்த்தப்படுவார்கள். வகுப்பறையில் இடையூறு விளைவிக்கும் அல்லது தனிப்பட்ட கவனம் தேவைப்படும் மாணவர்கள், கண்காணிப்புடன் அந்த அறைகளுக்கு அனுப்பப்படுவார்கள். இதன் மூலம் மற்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறுவதுடன், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் தனிப்பட்ட ஆதரவு வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக வகுப்பறைகளில் இடம்பெறும் வாய்வழி மிரட்டல், அவமதிப்பு மற்றும் உடல் வன்முறை சம்பவங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான தெளிவான நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்த புதிய திட்டங்களை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இருப்பினும், அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை பார்க்க காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் அண்மைக் காலமாக பள்ளிகளில் மாணவர்களின் நடத்தை மாற்றங்கள் குறித்து பல கன்டோன்களில் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், வலைஸ் கன்டோனின் இந்த நடவடிக்கை கல்வித்துறையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.





