குளிர்காலம் மீண்டும்: தாழ்நிலங்களிலும் பனிப்பொழிவு வாய்ப்பு சுவிட்சர்லாந்தில் குளிர்காலம் தற்காலிகமாக மீண்டும் திரும்பியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் பனிப்பொழிவு வரம்பு குறைந்து தாழ்நில பகுதிகளிலும் மீண்டும் பனி பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தோட்டப் பணிகளில் ஈடுபடும் மக்களுக்கு பெரும் கவலை தேவையில்லை என நிபுணர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். SRF Meteo தகவலின்படி, வியாழக்கிழமை அதிகாலை வெப்பநிலை பல இடங்களில் சுழியற்குக் கீழ் குறைந்தது. குறிப்பாக ஆல்ப்ஸ் வடக்கு பகுதியில் பனிப்பொழிவு தாழ்நிலங்களுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது. பகல் நேரத்தில் பனிப்பொழிவு இடைக்கிடையாக மட்டுமே காணப்பட்டாலும், மேகமூட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகலில் சில இடங்களில் சூரிய ஒளி தெரியும் வாய்ப்பும் உள்ளது. வெப்பநிலை பொதுவாக 3 முதல் 8 டிகிரி வரை இருக்கும் நிலையில், Tessin டிசினோ கன்டோனில் வானிலை தெளிவாக இருந்து 14 டிகிரி வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையும் ஆல்ப்ஸ் வடக்கு பகுதிகளில் மேகமூட்டத்துடன் பனிப்பொழிவு தொடரும். இரவு நேரங்களில் சில இடங்களில் -6 டிகிரி வரை குளிர்ச்சி பதிவாகும். வார இறுதியில் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்பட்டாலும், பிற்பகலில் வடமேற்கு திசையிலிருந்து மேகங்கள் திரண்டு மழை மற்றும் பனிப்பொழிவு தாழ்நிலங்களிலும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளிலும் இதே நிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு பிறகு வானிலை மீண்டும் மிதமானதாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீர் குளிர் தாக்கம் தாவரங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தாது என தோட்ட நிபுணர் Andreas Fässler தெரிவித்துள்ளார். நார்சிசஸ், ட்யூலிப் போன்ற வசந்த கால மலர்களும், தைம், சேஜ் போன்ற மெடிட்டரேனிய மூலிகைகளும் இந்த குளிரை எளிதாக சமாளிக்கும் என அவர் கூறினார். ஆனால் முழுமையாக மலர்ந்துள்ள செடிகளை பாதுகாப்பது நல்லது என்றும், குறிப்பாக அப்ரிகாட், நெக்டரின், பீச் மரங்கள், அலங்கார செர்ரி மற்றும் மக்னோலியா போன்றவற்றை மென்மையான போர்வையால் மூடுவது சிறந்தது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலிவ் மரங்கள் மற்றும் ஒலியாண்டர் போன்ற வெப்பம் விரும்பும் தாவரங்கள் இன்னும் மலராத நிலையில் இருந்தால் வெளியே வைத்திருக்கலாம். இருப்பினும் பாதுகாப்புக்காக அவற்றை மீண்டும் உள்ளே கொண்டு வரலாம் எனவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தற்காலிக குளிர் மாற்றம் பெரும்பாலும் வெளிப்புற தோற்றத்தில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என வானிலை மற்றும் தோட்ட நிபுணர்கள் ஒருமித்த கருத்து வெளியிட்டுள்ளனர்.