ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு – உயர் நிலை பனிச்சரிவு அபாய எச்சரிக்கை
ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு – உயர் நிலை பனிச்சரிவு அபாய எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் முழுவதும் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து பதிவாகி வருவதால், பனிச்சரிவு அபாயம் அதிகரித்து பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ள நிலையில், அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம் (SLF) ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் நிலை நான்கு அளவிலான அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தகைய உயர்நிலை எச்சரிக்கை இவ்வளவு பரவலாக வெளியிடப்படுவது அரிதானதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
நிபுணர்கள் கூறுவதாவது, தற்போது நிலைமை மிகவும் ஆபத்தானதாக உள்ளதால் அனுபவமுள்ள தொழில்முறை பனிச்சறுக்கு வீரர்களுக்குக் கூட பெரிய அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை மேலும் பனிப்பொழிவு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், குறிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே பனிச்சறுக்கு செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஒரு மலை வழிகாட்டி Blick செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், எந்த அளவு அனுபவம் கொண்டவராக இருந்தாலும் குறிக்கப்பட்ட பாதைகளை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று எச்சரித்துள்ளார். பாதுகாப்பு குறிக்கப்பட்ட வழித்தடங்களை விட்டு வெளியே செல்லும் போது பனிச்சரிவு அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களில் புதிய பனி மிக அதிக அளவில் பழைய பனிக் குவியல்களின் மேல் சேர்ந்து இருப்பதே தற்போதைய அபாயத்திற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த கலப்பு அடுக்குகள் மிகவும் நிலையற்றதாக மாறி, சிறிய அதிர்வுகளாலும் கூட பனிச்சரிவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
© WRS






