சுவிட்சர்லாந்தில் முட்டை பற்றாக்குறை – இறக்குமதி அளவு அதிகரிப்பு சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை தேவையை உள்ளூர் உற்பத்தியாளர்கள் பூர்த்தி செய்ய முடியாத நிலை தொடர்கிறது. இதையடுத்து, தேவையை சமநிலைப்படுத்தும் நோக்கில் Swiss Federal Council இந்த ஆண்டு இறக்குமதி வரம்பை 71 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் மூலம், மொத்த சுங்கக் கோட்டா 36,000 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே 1ஆம் தேதி முதல் ஆண்டு இறுதி வரை கூடுதலாக அதிகபட்சம் 15,000 டன் உபயோக முட்டைகளை குறைந்த சுங்க வரியில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வெளியிட்ட தகவலின்படி, உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருந்தாலும், மக்கள் பயன்பாடு அதைவிட வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை அவசியமானதாகியுள்ளது. 2025ஆம் ஆண்டில் ஒருவருக்கு சராசரியாக 209 முட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது முதல் முறையாக 200 முட்டைகள் என்ற அளவை கடந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட சுமார் ஒரு டஜன் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் முட்டை உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 7 சதவீதம் உயர்ந்திருந்தாலும், அதிகரித்த தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாததால், கூடுதல் இறக்குமதி அவசியமாகியுள்ளது. புதிய திட்டத்தின் கீழ், இந்த 15,000 டன் கூடுதல் இறக்குமதி இரண்டு கட்டங்களாக அனுமதிக்கப்படும். முதல் கட்டமாக மே 1ஆம் தேதி முதல் 9,750 டன் மற்றும் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5,250 டன் இறக்குமதி செய்யப்படும். இத்துடன், வழக்கம்போல் “முதல் வருவோருக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் சுங்க அறிவிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் முறையில் இந்த கோட்டா பகிர்ந்தளிக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் ஆண்டின் மீதியுள்ள காலத்திற்குள் சுமார் 240 மில்லியன் கூடுதல் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சந்தையில் நிலவும் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு தடையில்லா விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும். © KeystoneSDA