சுவிட்சர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்
சுவிட்சர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்

சுவிட்சர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்…
மூன்று ஆண்டுகளுக்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுவிட்சர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.
சுவிஸ் அதிபர் கை பார்மெலின் மற்றும் பிரிட்டனின் வணிகம், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் கைல் ஆகியோர் இந்த முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், பொறியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிபுணர்கள் பணி தொடர்பான பயணங்களை எளிதாக மேற்கொள்ள முடியும். மேலும், சேவைத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு பிரிட்டனில் வணிகம் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் அதிக சட்டப்பூர்வ உறுதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, குறிப்பாக டிஜிட்டல் வர்த்தக நடவடிக்கைகளில் இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சேவை வர்த்தகம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 8 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டன் இடையிலான பயணங்களில் ரோமிங் கட்டணங்களை குறைக்கும் அல்லது நீக்கும் வாய்ப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது எப்போது நடைமுறைக்கு வரும் மற்றும் எந்த சேவைகளுக்கு பொருந்தும் என்பது குறித்து விரைவில் தெளிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள இரண்டு முக்கிய நாடுகள் திறந்த சந்தை மற்றும் நம்பகமான வர்த்தக விதிகளை ஆதரிப்பதற்கான ஒரு முக்கிய சிக்னலாகவும் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் இன்னும் இரு நாடுகளின் நாடாளுமன்ற ஒப்புதலை பெற வேண்டும். அதன் பின்னரே இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.





