Swiss News In Tamil

சூரிக் அருகே தமிழர் வீட்டில் பெருமளவான தங்க நகைகள் திருட்டு.!!

சூரிக் அருகே தமிழர் வீட்டில் பெருமளவான தங்க நகைகள் திருட்டு

சூரிக் (Zürich) அருகிலுள்ள (Fehraltorf) பெரால் டோப் பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் கெல்லரில் (Keller) பாதுகாப்பாக வைத்திருந்த தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சுவிஸ் தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், அவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாகவும், ஆரம்ப காலங்களில் தங்களது நகைகளை வங்கியின் பாதுகாப்பு லாக்கரில் வைத்திருந்ததாகவும், பின்னர் சொந்த வீடு வாங்கி, வீடு மாற்றம் மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்குப் பிறகு அவற்றை வீட்டின் கெல்லரில் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஒரு நிகழ்விற்காக நகைகளை எடுக்க கெல்லருக்குச் சென்றபோது, நகைகள் காணாமல் போனது தெரியவந்ததாக கூறப்படுகிறது. நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் அப்படியே இருந்த நிலையில், உள்ளே இருந்த தங்க நகைகள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் விசித்திரமாக, கெல்லர் கதவு அல்லது பூட்டில் உடைப்பு தடயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும், யாரோ ஒருவர் திறவுகோல் போன்ற முறையில் உள்ளே நுழைந்து இருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

b52184ea 20e8 4801 bccf 2e1110cbd4f6

திருடப்பட்ட நகைகளில் சங்கிலிகள், வளையல்கள், தமது மகளின் விலையுயர்ந்த ஆபரங்களும் உள்ளிட்ட பல ஆண்டுகளாக சேமித்து வாங்கிய நகைகள் இருந்ததாகவும், அவற்றின் மொத்த மதிப்பு  தற்போதைய பெறுமதிக்கு ஏற்ப இன்னும் கணக்கிடப்படவில்லை என எனவும் தெரிவிக்கப்படுகிறது. சில நகைகளுக்கான வாங்கிய பில்கள் இருப்பதாகவும், சிலவற்றுக்கான ஆவணங்கள் இல்லையெனவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் வழங்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன், நகை பெட்டிகள் மற்றும் சில ஆதாரங்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தாம் இருக்கும் பகுதிகளில் வீடுகளில் திருடர்கள் உள்நுழையும் சம்பவங்களை கருத்தில் கொண்டு கெல்லருக்கும் திருடர்கள் நுழையமாட்டார்கள் என எண்ணி நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து நகைகளை பத்திரமாக அங்கே வைத்துப்பேணியதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பெண் தெரிவித்தார்.

இதனிடையே, அண்மைக் காலமாக கெல்லர்கள் மற்றும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் தங்களது மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும், சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் காணப்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button