ஈரான் போரின் பின்னணி : டுபாயிலிருந்து செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்தை நாடுகின்றனர்
ஈரான் போரின் பின்னணி: டுபாயிலிருந்து செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்தை நாடுகின்றனர்
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில், டுபாயைச் சேர்ந்த செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்தை பாதுகாப்பான தங்குமிடமாகத் தேர்வு செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக Zug கன்டோன், அதன் நிலையான அரசியல் சூழல் மற்றும் நாட்டிலேயே குறைந்த வரி விகிதம் காரணமாக, உயர்ந்த வருமானம் கொண்டவர்களை ஈர்க்கும் முக்கிய மையமாக மாறியுள்ளது.
இந்த மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள Heinz Tännler, டுபாயிலிருந்து வருவோரின் விசாரணைகள் மற்றும் ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். துல்லியமான எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த போக்கில் தெளிவான உயர்வு காணப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

ஈரான் தொடர்பான மோதல்கள் மற்றும் பிராந்திய அரசியல் அசாதாரணம் காரணமாக, வளமான முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துகளையும் குடும்பங்களையும் பாதுகாப்பான நாடுகளுக்கு மாற்ற முனைவதாக மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், சுவிட்சர்லாந்து அதன் அரசியல் நிலைத்தன்மை, வங்கி ரகசியம் மற்றும் உயர் தர வாழ்க்கை முறையின் காரணமாக நீண்ட காலமாகவே செல்வந்தர்களின் விருப்பமான இடமாக இருந்து வருகிறது.
இதேவேளை, நடப்பிலுள்ள மோதல்களை குறித்து வருத்தம் தெரிவித்த Heinz Tännler, அதே நேரத்தில் இந்த நிலைமையால் Zug கன்டோன் ஒரு வகையில் நன்மை அடைந்து வருவதை மறுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.





