ஈரான் பதற்றம்: தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது
ஈரான் பதற்றம்: தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் போர் நிலையும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் காரணமாக, ஈரான் தலைநகர் தெஹ்ரான் (Tehran) நகரில் செயல்பட்டு வந்த தனது தூதரகத்தை தற்காலிகமாக மூடுவதாக சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், சுவிஸ் தூதுவர் மற்றும் மேலும் ஐந்து பணியாளர்கள் பாதுகாப்பு காரணங்களால் இன்று தரைவழியாக ஈரானை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே தூதரகத்தில் பணியாற்றியிருந்த நான்கு பணியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது தூதரகத்தில் இருந்த அனைத்து சுவிஸ் பணியாளர்களும் வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை சீராகிய பின்னர், சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர்கள் மீண்டும் தெஹ்ரானுக்கு திரும்புவார்கள் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

சுவிட்சர்லாந்து பல ஆண்டுகளாக ஈரானில் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கும் “புரொடெக்டிங் பவர்” (Protecting Power) என்ற பொறுப்பை வகித்து வருகிறது. 1980 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் நேரடி தூதரக உறவுகள் இல்லாத நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு மற்றும் தூதரக தொடர்புகளை சுவிட்சர்லாந்தே நடுவண் நாட்டாக இருந்து மேற்கொண்டு வருகிறது.
தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தகவல் தொடர்பு வழிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
மேலும், ஈரானில் வாழும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்களுக்கு தேவையான பாதுகாப்பு எச்சரிக்கைகள், அவசர நிலை தகவல்கள் மற்றும் இடர் மேலாண்மை தொடர்பான அறிவிப்புகளை அமெரிக்க அதிகாரிகளின் சார்பில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக பல நாடுகள் தங்களது தூதரக பணியாளர்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தும் தனது தூதரக பணியாளர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.





