ப்ருக் நகரில் கார் திருட்டு சந்தேகம்: இரு இளைஞர்கள் கைது
ப்ருக் நகரில் கார் திருட்டு சந்தேகம்: இரு இளைஞர்கள் கைது
ஆர்காவ் கன்டோனில் (Aargau) உள்ள ப்ருக் (Brugg) நகரில் கார் திருட்டு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை Kantonspolizei Aargau வெளியிட்டுள்ளது.
2026 பிப்ரவரி 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை, ப்ருக் நகரில் உள்ள தனி வீட்டு உரிமையாளர் ஒருவர், தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே இரண்டு அறியப்படாத நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கவனித்தார். காலை ஏழு மணியளவில் பதிவான இந்த காட்சிகளை அவர் அதே நாளில் பிராந்திய போலீஸ் நிலையத்தில் தெரிவித்து புகார் அளித்தார்.
இதையடுத்து பிராந்திய போலீசார் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர். குறித்த நபர்களின் உடலமைப்பு விவரங்களுக்கு ஏற்ப சந்தேகநபர்களை விரைவில் கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 22 வயதுடைய அல்ஜீரிய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் உள்ளூர் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், இருவரும் மேலதிக விசாரணைக்காக ஆர்காவ் கன்டோனல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதே நாளில் ப்ருக் நகரிலிருந்து மேலும் சில புகார்கள் பதிவாகின. இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் பிற இடங்களில் அறியப்படாத நபர்கள் கொள்ளை நோக்கில் சுற்றித்திரிந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த கூடுதல் சம்பவங்களும் கைது செய்யப்பட்ட இருவருடன் தொடர்புடையதா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆர்காவ் கன்டோனல் போலீசார் சம்பவத்தின் முழுமையான பின்னணியை உறுதி செய்ய மேலதிக ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
சமீப காலமாக சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் இரவு நேர கார் உடைப்பு மற்றும் திருட்டு முயற்சிகள் அதிகரித்துள்ளன. இதனால் குடியிருப்போர் தங்கள் வீடுகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு கேமரா, வெளிச்ச வசதி மற்றும் பாதுகாப்பு பூட்டுகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என போலீசார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். Kapo AG





