ஆர்காவ் கன்டோனிலுள்ள சுர்சாக் நகராட்சியில் முழுமையான பட்டாசு தடை.!!
ஆர்காவ் கன்டோனிலுள்ள சுர்சாக் (Zurzach) நகராட்சியில் முழுமையான பட்டாசு தடை.!!
சுவிட்சர்லாந்தின் சுர்சாக் நகராட்சியில், 2025 கோடை காலத்தில் நகராட்சி மன்றம் எடுத்த முடிவின் படி, முழு நகராட்சி எல்லைக்குள் பட்டாசுகள் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை, வருகிற புத்தாண்டு கொண்டாட்டமான சில்வெஸ்டர் இரவிலும், நகராட்சிக்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் பொருந்தும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த புதிய விதிமுறையின் கீழ், ராக்கெட்டுகள், வெடிபொட்டிகள், பட்டாசுகள் போன்ற எந்தவொரு பைரோடெக்னிக் பொருட்களையும் வெடிக்கச் செய்வதற்கோ, சத்தம் ஏற்படுத்தும் வெடிப்பொருட்களை பயன்படுத்துவதற்கோ இனி அனுமதி இல்லை. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதே இந்தத் தடையின் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சில குறைந்த ஆபத்து கொண்ட பொருட்களுக்கு மட்டும் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வுல்கான் வகை சிறிய ஒளிப்பொறிகள், தீப்பந்தங்கள், மேசை அலங்கார பட்டாசுகள் மற்றும் பெங்காலி தீப்பொறிகள் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி தொடரும் என நகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், அதிக சத்தம் காரணமாக ஏற்படும் தொந்தரவு, சுற்றுச்சூழல் மாசு, மேலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் அபாயங்களை குறைக்க நகராட்சி மன்றம் விரும்புகிறது. குறிப்பாக, செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள் மற்றும் வயதானவர்கள் மீது பட்டாசு சத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கப்பட்டுள்ளது.
பொது நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு மக்கள் புரிதலும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என சுர்சாக் நகராட்சி மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
® Kapo AG





