சுவிட்சர்லாந்தில் புதிதாக குடியேறும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வரி? – அரசியல் விவாதம் தீவிரம்
சுவிட்சர்லாந்தில் புதிதாக குடியேறும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வரி? – அரசியல் விவாதம் தீவிரம்

சுவிட்சர்லாந்தில் புதிதாக குடியேறும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வரி? – அரசியல் விவாதம் தீவிரம்
சுவிட்சர்லாந்தில் புதிதாக குடியேறும் வெளிநாட்டவர்களிடம் இருந்து விசேட வரி வசூலிக்கும் யோசனை தற்போது அரசியல் மட்டத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
FDP.The Liberals எனப்படும் லிபரல் கட்சி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) நடைபெறவுள்ள புதிய பேச்சுவார்த்தைகளில் இந்த யோசனையும் இடம்பெற வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த முன்மொழிவின்படி, புதிதாக சுவிட்சர்லாந்துக்கு குடியேறும் வெளிநாட்டவர்கள் தினசரி 10 முதல் 25 சுவிஸ் பிராங்குகள் வரை மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் செலுத்த வேண்டியிருக்கலாம். மாற்றாக, 11 ஆண்டுகள் வரை அவர்களின் வருமானத்தில் கூடுதல் 3 சதவீத வரி விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இது, சுவிட்சர்லாந்தில் இராணுவ சேவையில் ஈடுபடாத சுவிஸ் குடிமக்கள் செலுத்தும் கட்டணத்துக்கு ஒத்ததாக இருக்கும் என விளக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வருவாய் கிடைக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, Swiss Federal Council இந்த யோசனைக்கு முழுமையாக எதிராக இல்லை என்ற சிக்னலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதை நடைமுறைப்படுத்துவது சட்ட ரீதியாக மிகவும் சிக்கலானதாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, சுவிட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான “சுதந்திரமான நபர் நகர்வு” (Free Movement of Persons) ஒப்பந்தத்தின் கீழ், EU நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களிடமிருந்து வேறுபடுத்தி நடத்த முடியாது. எனவே இந்த புதிய வரி திட்டம் EU குடிமக்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்த யோசனை தற்போது அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவாளர்கள், குடியேற்றத்தால் ஏற்படும் உள்கட்டமைப்பு மற்றும் சமூகச் செலவுகளை சமநிலைப்படுத்த இது உதவும் என கூறுகின்றனர். மறுபுறம், எதிர்ப்பாளர்கள் இது வெளிநாட்டவர்களை குறிவைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
©WRS





