கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்துக்குப் பிறகு நிறுவனங்களில் முதலுதவி பயிற்சிக்கு அதிக வரவேற்பு
கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்துக்குப் பிறகு நிறுவனங்களில் முதலுதவி பயிற்சிக்கு அதிக வரவேற்பு
சுவிட்சர்லாந்தின் வலைஸ் கன்டோனில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி இடம்பெற்ற பாரில் ஏற்பட்ட தீ விபத்து பலரது உயிரிழப்புக்கு காரணமானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பணியிடங்களில் முதலுதவி மற்றும் அவசரநிலை பயிற்சிகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸ் முதலுதவி பயிற்சி மையம் (Swiss First Aid Training Center) வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் முதலுதவி பயிற்சி கோரிக்கைகள் சுமார் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. குறிப்பாக நிறுவனங்களின் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான முன்பதிவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

அண்மைய வாரங்களில் முதலுதவி வழங்கும் திறன், பணியிட அவசரநிலை மேலாண்மை மற்றும் தீ பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் அவசரநிலைகளில் விரைவாகவும் திறமையாகவும் செயல்படத் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்ற போக்கு தீ பாதுகாப்பு பயிற்சி வழங்கும் துறையிலும் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு கூட இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமானோர் பயிற்சிகளில் சேர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்துக்குப் பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரநிலை தயார்நிலை குறித்து நிறுவனங்களும் பணியாளர்களும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதை இந்த மாற்றம் பிரதிபலிப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.





