இத்தாலி ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக கிராவ்வுன்டனில் போக்குவரத்து அதிகரிக்கும்
இத்தாலி ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக கிராவ்பூன்டனில் போக்குவரத்து அழுத்தம் அதிகரிக்கும்
வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இத்தாலியின் வடக்கு பகுதிகளுக்குச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக லிவிஞோ (Livigno) என்ற மலைப்பகுதி நகரம் முக்கியமான போட்டி தளமாக இருப்பதால், சுவிட்சர்லாந்தின் கிராவ்பூன்டன் வழியாக பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதற்காக, கிராவ்வுன்டன் மாநில காவல்துறை, ஆற்றல் மற்றும் போக்குவரத்து அலுவலகம், சிவில் பொறியியல் துறை ஆகியவை இணைந்து கடந்த பல மாதங்களாக ஒரு சிறப்பு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை உருவாக்கி வருகின்றன. குளிர்கால விடுமுறை காலத்துடன் ஒலிம்பிக் நேரம் ஒன்று சேருவதால், அந்தக் காலத்தில் வாகன நெரிசல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த கூடுதல் ஏற்பாடுகளுக்கான செலவுகளை சுவிட்சர்லாந்து தாங்க வேண்டியதில்லை என கிராவ்பூன்டன் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. “நாங்கள் செலவு செய்து, பலனை இத்தாலி பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாது,” என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, போக்குவரத்து திட்டமிடல் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களுக்கான நிதி பங்களிப்பை இத்தாலி அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. அதனால் சுவிட்சர்லாந்தின் கிழக்கு பகுதிகளிலிருந்து ரசிகர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான சரக்கு வாகனங்கள் இத்தாலிக்குச் செல்லும் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராவ்பூன்டன் அதிகாரிகள் இதனை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்தை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© KeystoneSDA





