Swiss News In Tamil

சுவிஸ் மாவீரர் நாள் 2025 : பாசல் மாநிலத்தில் அலைகடல் என திரண்ட தமிழ் உணர்வாளர்கள்.!

சுவிஸ் மாவீரர் நாள் 2025 : பாசல் மாநிலத்தில் அலைகடல் என திரண்ட தமிழ் உணர்வாளர்கள்.!

தாயக விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 வியாழக்கிழமை பாசல் மாநிலத்தின் Messe அரங்கில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

சுமார் 5000 இற்கு மேற்பட்ட மக்களுடன் எழுச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர் தியாகங்களை வெளிக்காட்டும் வகையிலான இளையோர்களின் கலைநிகழ்வுகளும் மாவீரர் நினைவாக நடாத்தப்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

கடந்த 22 ஆண்டுகளாக Fribourg மாகாணத்தில் இடம்பெற்றுவந்த மாவீரர் நாள், கடந்த இரண்டு ஆண்டுகளாக  சுவிசின் அயல்நாடுகளான யேர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளை இணைக்கும் பாசல் நகரின் Messe மண்டபத்தில் நடைபெற்றதால் அங்கிருந்தும் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆயிரமாயிரமாய் அணிதிரண்ட எம் மக்களின் எழுச்சியும் மாவீரர் நாளின் மகத்துவமும் சுவிஸ் நாட்டவர்களால் வியந்து நோக்கப்பட்டது. மிகப் பிரமாண்ட அரங்கில் 1700 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருமுகங்கள் ஏற்றப்பட்ட சுடர்களிலே ஒளிவீச, முதன்மை கோபுரமும் தடையகற்றிகளின் கோபுரமும் நடுகல் நாயகர்களின் கோபுரமும் கரும்புலிகளின் கோபுரங்களும் நிமிர்ந்து நிற்க, நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் திருவுருவப்படங்கள் உணர்வோடு சங்கமித்திருந்தன.

தமிழீழத் தேசியச் சின்னங்கள் அரங்கு முழுவதையும் எழுச்சியூட்ட, தமிழீழத்தேசியக்கொடி பட்டொளி வீச, மாவீரர் குடும்ப உறவுகளின் உணர்வலைகள் மாவீரம் சொல்ல குழந்தைகள், சிறுவர், இளையோர், உணர்வாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்களென எல்லோரும் மாவீரர் நினைவுகளோடு உறைந்திருந்து உறுதி எடுத்துக்கொண்ட காட்சி மாபெரும் வரலாற்றுப் பதிவாகும்.

IMG 20241127 WA0399 680x400 1

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டைப்போலவும் இம்முறையும் இறுதி நேரத்தில் பின்னப்பட்ட பல்வேறு சதிவலைகள் மற்றும் குழம்ப நிலமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாத மக்கள் உண்மையான தேசப்பற்றுடனும் மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, எத்தடைவரினும் அத்தடை உடைத்து தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டலை ஏற்ற மக்களாக தமிழீழத் தாய்நாட்டை மீட்போம் என்ற உறுதியுடன் பாசல் நகருக்கு அலைகடல் என திரண்டுவந்திருந்தமை பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவமே.

மாவீரர்களின் ஆத்மாக்களுக்கு துரோகம் இழைக்க நேரிடும் எவரையும் மக்கள் கண்டுகொள்ளப்போவதில்லை என்ற ஒரு வரலாற்று உண்மையினையும் இம்முறை சுவிட்சர்லாந்தின் மாவீரர் நிகழ்வுகள் பறைசாற்றி சென்றிருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

எமது லட்சியத்தை துடைத்தெறிய பல்வேறு வழிகளிலும் எதிரிகள் நன்கு திட்டமிட்டு எம்மவர்களைக்கொண்டே பிளவுகளையும் பல்வேறு பிரிவுகளையும் தோற்றுவித்து பல்வேறு சதித்திட்டங்களையும் குழப்பங்களை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ்தேசியத்தினை இறுகப்பற்றிக்கொண்டு பயணிக்கின்ற மாவீர்களது பெற்றோர்களும் தமிழீழ மக்களும் இதனை சரியாக புரிந்து கொண்டு எத்தடை வரினும் அத்தடை உடைத்து அனைவரும் ஒரே குடையின் கீழ் திரண்டு எமது ஒன்றுமையை பறைசாற்ற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

எதிரியின் சூழ்ச்சியும் சூட்சுமமும் புரியாமல் புரிதல் இன்றி அவர்களின் சதிவலைக்குள் சிக்கி மீளமுடியாமல் பிளவுபட்டு கிடக்கும் எம்மவர் சிலர் எதிர்காலத்தில் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு ஒன்றுபட்டு செயல்படுவதே எமது தேசிய விடுதலைக்கான சரியான பாதையாக இருக்க முடியும்.

 

Related Articles

Back to top button