Swiss News In Tamil

“சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அங்குரார்ப்பண நிகழ்வு.!!

"சுவிஸ் தமிழ் ஊடக மையம்" அங்குரார்ப்பண நிகழ்வு.!!

சுவிற்சர்லாந்தின் பாசல் பிராந்தியத்துக்கு அருகாமையில் “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை சார்ந்த மற்றும் ஆர்வம்மிக்க நண்பர்களின் சந்திப்புக்களின் வழியே தோற்றம் பெற்ற இந்த அமைப்பானது நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகமாகியுள்ளது.

நேற்று பிற்பகல் 4.00 மணிக்கு சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் மயூரன் தலைமையில் நடந்த நிகழ்வில், விழாச் சுடரினை சுவிற்சர்லாந்தின் சோசலிச ஜனநாயக கட்சியின் சொலத்தூன் மாநில Hofstellen – Flüh பகுதியின் கலை, கலாச்சாரப்பிரிவின் உறுப்பினர் சுலோஜன் சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இது வரை காலமும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படத்துக்கான ஈகைச்சுடரினை சுவிற்சர்லாந்தின் தமிழ் கல்விச்சேவை மற்றும் Tess Care மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் வினுசன் ஜெயரட்ணராசா ஏற்றி வைக்க, ஊடகச் செயற்பாட்டாளர் கரன் மலர் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அகவணக்கமும் வருகை தந்தோரின் மலர் வணக்கமும் இடம்பெற்றது.

WhatsApp Image 2024 05 26 at 23.20.45 f1b9505c WhatsApp Image 2024 05 26 at 22.54.25 af95d2de WhatsApp Image 2024 05 26 at 22.54.21 6138c51e

WhatsApp Image 2024 05 26 at 22.54.30 9e0d1495 WhatsApp Image 2024 05 26 at 22.54.22 b8238c2a WhatsApp Image 2024 05 26 at 22.54.23 9e56026d WhatsApp Image 2024 05 26 at 22.54.26 6b0cb139

தலைமையுரையினை சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் தலைவர் ஊடகவியலாளர் ஜெராட் நிகழ்த்தினார். அவர் உரையில் ஊடக மையத்தின் தோற்றம் பற்றியும் தேவை பற்றியும் செயற்பாடு பற்றியும் தொட்டுச் சென்றார்.

படுகொலை செய்யப் பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய நினைவுப் பேருரையினை சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் உபதலைவர் ஊடகவியலாளர் அசோக் நிகழ்த்தினார்.

வாழ்த்துரையினை பாசல் இந்து ஆலயத்தின் தலைவரும், பிறாத்தல்ன் நகரசபை உறுப்பினருமான குலசிங்கம் விக்னராஜா நிகழ்த்தியிருந்தார். அவர் தனதுரையில் ஊடகம் மற்றும் அரசியல் துறையில் இளைய தலைமுறையினர் தடம்பதிக்க வேண்டும் என்பதனையும் அதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தார்.

சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து சுவிற்சர்லாந்தின் சோசலிச ஜனநாயக் கட்சியின் உறுப்பினராகி அரசியலில் தடம் பதிக்கும் சுலோஜன் சுந்தரலிங்கம் ஊடகத்துறையின் அவசியம் பற்றியும் ஊடக சுதந்திரம் பற்றியும் தனதுரையில் சுட்டிக்காட்டியுருந்தார்.

இறுதியுத்தம் வரை முள்ளிவாய்காலில் இருந்து மீண்டு வந்த ஊடகவியலாளர் அமரதாஸ் சிறப்புரை ஆற்றினார். சுவிஸ் ஊடக மையம் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமென அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” திட்டமிட்டபடி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மூத்த ஊடகவியலாளர்கள் மதிப்பளிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் அவர்கள் மதிப்பளிக்கப்படுவதற்காக தெரிவாகியிருந்தார். அவரது உடல் நலக்குறைவால் அவரால் சமூகமளிக்க முடியாது போயிருந்தது. அவருக்கான மதிப்பளிப்பினை ஊடகவியலாளர் அமரதாஸ் வழங்க ஊடகவியலாளர் அசோக் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து “சுவிஸ் ஊடக மையம்” அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

*தலைவர் ஜெராட்

*உபதலைவர் அசோக்

*செயலாளர் மதனராஜ்

*உபசெயலாளர் வின்ஸ்லோ

*பொருளாளர் மயூரன்

ஆலோசகர்

ஊடகவியலாளர் கனகரவி

அறிமுகத்தினைத் தொடர்ந்து ஊடகவியலாளர் கனகரவி அவர்களின் அறிமுக உரை இடம்பெற்றது. அறிமுக உரையில் ஊடகத்துறையின் சவால்கள் பற்றியும் சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் முன் விரிந்துள்ள பணிகள் பற்றியும் தொட்டுச் சென்றார்.

சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் செயலாளர் மதன்ராஜ் அவர்களின் நன்றியுரையுடன் அரங்க நிகழ்வு திட்டமிட்ட படி 5.30 மணிக்கு நிறைவு கண்டது.

சிறிய சிற்றுண்டி இடைவேளையை தொடர்ந்து வருகை தந்தவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பல்வேறு கருத்துக்களையும் பல விடயங்கள் சார்ந்த தமது ஆதங்கங்களையும் முன் வைத்தார்கள்.

இவை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு அவை நோக்கி ஊடக மையம் செயற்படுமென குறிப்பிடப்பட்டது.

Related Articles

Back to top button