ஜூன் மாத வெப்ப அலையால் சுவிட்சர்லாந்தில் 200-க்கும் மேற்பட்ட முதியோர் உயிரிழப்பு
ஜூன் மாத வெப்ப அலையால் சுவிட்சர்லாந்தில் 200-க்கும் மேற்பட்ட முதியோர் உயிரிழப்பு

ஜூன் மாத வெப்ப அலையால் சுவிட்சர்லாந்தில் 200-க்கும் மேற்பட்ட முதியோர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை, 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் உயிரிழப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அரசின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக வெப்பம் நீடித்த 13 நாட்களில், எதிர்பார்க்கப்பட்ட அளவை விட முதியோரின் உயிரிழப்பு விகிதம் சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கிடையில், ஐரோப்பாவின் பல நாடுகளை மீண்டும் கடுமையான வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், Neuchâtel பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காலநிலை ஆய்வாளர் Martine Rebetez, எதிர்காலத்தில் வெப்ப அலைகள் மேலும் அடிக்கடி, நீண்ட காலம் மற்றும் அதிக தீவிரத்துடன் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் சுவிட்சர்லாந்திலும் தெளிவாக உணரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வெளிப்புறங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அதிக உடல் உழைப்பு மேற்கொள்ளும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கடுமையான வெப்ப காலங்களில் பணிநேரம் மற்றும் வேலை நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ நிபுணர்கள், அதிக வெப்பம் முதியவர்கள், நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், நேரடி வெயிலைத் தவிர்த்தல் மற்றும் உடல் நலத்தில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுதல் அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது சுவிட்சர்லாந்து முழுவதும் அதிக வெப்பம் மற்றும் வறட்சி தொடர்வதால், காட்டுத்தீ அபாயமும் உயர்ந்த நிலையில் உள்ளது. இதனால், வெப்ப அலையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பொதுமக்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






