சால்ஸ்பர்க் – சூரிக் ரயிலில் 356,000 யூரோ பணத்துடன் சுவிஸ் நபர் சிக்கினார்
சால்ஸ்பர்க் – சூரிக் ரயிலில் 356,000 யூரோ பணத்துடன் சுவிஸ் நபர் சிக்கினார்

சால்ஸ்பர்க் – சூரிக் ரயிலில் 356,000 யூரோ பணத்துடன் சுவிஸ் நபர் சிக்கினார்
ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் (Salzburg) நகரிலிருந்து சூரிக் (Zürich) நோக்கி பயணித்த ரயிலில், 356,000 யூரோ பணத்துடன் பயணித்த 50 வயது சுவிஸ் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் சோதனையில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் பணமோசடி அல்லது தீவிரவாத நிதியுதவி தொடர்பான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Bundesamt für Zoll und Grenzsicherheit (BAZG) அதிகாரிகள் ஏப்ரல் 26 ஆம் தேதி Buchs எல்லைப் பகுதியில் ரயில் சோதனையை மேற்கொண்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சோதனையின் போது, அந்த நபரிடம் தன்னுடன் பொருட்கள் அல்லது பணம் எதுவும் உள்ளதா என அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் எதுவும் இல்லை என்றும், தன்னிடம் பயணப்பெட்டிகளே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிகாரிகளில் ஒருவர், அந்த நபர் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் ஒரு பையை கவனித்துள்ளார். பின்னர் மீண்டும் விசாரிக்கப்பட்டபோது, அந்த பை தன்னுடையதே என 50 வயது நபர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பையில் இருந்த ஐந்து வெள்ளை உறைகள் மற்றும் பணப்பையில் மொத்தமாக 356,000 யூரோ பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்கப்பட்டபோது, அந்த பணம் தன்னுடையது அல்ல என்றும், தாம் வெறும் “தூதுவர்” மட்டுமே என்றும் அந்த நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் வழங்கிய ஆவணங்கள் மற்றும் பணத்தின் மூலாதாரம் மற்றும் பயன்படுத்தப்படவிருந்த நோக்கம் தொடர்பான தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், இந்த பணம் பணமோசடி அல்லது தீவிரவாத நிதியுதவியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.
இதையடுத்து BAZG அதிகாரிகள் அந்த பணத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்து, வழக்கை சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறைக்கு ஒப்படைத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து சட்டங்களின்படி, பணம், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் மதிப்புள்ள பத்திரங்களை எந்த வரம்பும் இல்லாமல் நாட்டுக்குள் கொண்டு வர அனுமதி உள்ளது. அவற்றை முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் 10,000 சுவிஸ் பிராங்குகளைத் தாண்டும் பணம் வைத்திருந்தால், அதிகாரிகள் கேட்டால் அந்த பணத்தின் உரிமையாளர், பெறுநர், மூலாதாரம் மற்றும் பயன்பாடு குறித்து உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.
தவறான தகவல் வழங்கினாலோ அல்லது தகவல் மறைத்தாலோ அபராதம் விதிக்கப்படலாம். மேலும் பணமோசடி அல்லது தீவிரவாத நிதியுதவி சந்தேகம் ஏற்பட்டால், பணத்தை அதிகாரிகள் தற்காலிகமாக பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைக்க முடியும்.
© BAZG





