சொகுசு வீடுகளில் வேலை செய்த செர்பிய பெண்கள் சுரண்டப்பட்டதாக குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்தின் பிரபல சொகுசு சுற்றுலா நகரமான Gstaad பகுதியில், செர்பியாவைச் சேர்ந்த பெண்கள் பலர் பல ஆண்டுகளாக மனிதாபிமானமற்ற வேலைச் சூழலில் சுரண்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tages-Anzeiger வெளியிட்ட தகவலின்படி, இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் செர்பிய தம்பதியரும் அவர்களது மகளும் எதிர்வரும் வாரம் Thun நகரில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
Public Prosecutor’s Office அவர்களுக்கு எதிராக மனிதக் கடத்தல், மிரட்டல், கட்டாய வேலைக்கு உட்படுத்தல், உடல் சேதம், ஆவண மோசடி, பணமோசடி, அதிக வட்டி வசூல் மற்றும் வரி மோசடி உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
விசாரணைகளின் படி, குற்றச்சாட்டுக்குள்ளான குடும்பம் Serbia நாட்டின் வறுமை நிலைமையிலிருந்த பெண்களை இலக்கு வைத்து வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு ஒழுங்கையான வேலை நேரம், தினமும் மூன்று வேளை உணவு மற்றும் மாதம் 1,500 சுவிஸ் பிராங்குகள் சம்பளம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில், அவர்கள் வாரத்தின் ஏழு நாட்களும் தினமும் 16 மணி நேரம் வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பெண்கள் சொகுசு ஹோட்டல்கள், தனியார் வீடுகள் மற்றும் உயர்பட்ட குடியிருப்புகளில் சுத்தம் செய்வதோடு, சில இடங்களில் குழந்தைகளை பராமரிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் “காணப்படக்கூடாதவர்கள்” போல நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சில பெண்களுக்கு அதிகாலை முன்பே ஜன்னல்கள் மற்றும் மாடிப்பகுதிகளை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டதுடன், பகலில் பால்கனியில் கூட நிற்க அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சிலரின் பாஸ்போர்ட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வேலை விட்டு செல்ல முயன்றவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என மிரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 முதல் 53 வயதுக்குள் உள்ள சுமார் 40 பெண்கள் இந்த சுரண்டலுக்கு உட்பட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.
2019ஆம் ஆண்டு அண்டை வீட்டாரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறை விசாரணை ஆரம்பித்தது. அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்குள்ளான மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தற்போது சுவிட்சர்லாந்தில் குடியேற்ற தொழிலாளர்கள் மற்றும் வீட்டு வேலைகளில் நடைபெறும் மறைமுக சுரண்டல் தொடர்பாக பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
©Tages Anzeiger