13வது AHV ஓய்வூதியம் வருகிறது… ஆனால் விலையை மக்கள்தான் செலுத்த வேண்டுமா?
13வது AHV ஓய்வூதியம் வருகிறது... ஆனால் விலையை மக்கள்தான் செலுத்த வேண்டுமா?

13வது AHV ஓய்வூதியக் கொடுப்பனவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக முக்கிய முன்னேற்றம் சுவிட்சர்லாந்தில்ஏற்பட்டுள்ளது.
தேசிய மன்றமும் மாநிலங்கள் சபையும் இதுவரை ஒருமித்த முடிவுக்கு வர முடியாத நிலையில், இரு அவைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இணக்கக் குழு புதிய சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, ஊழியர்களும் முதலாளிகளும் செலுத்தும் AHV ஊதியப் பங்களிப்பு 0.2 சதவீதப் புள்ளிகளால் உயர்த்தப்பட உள்ளது. அதே நேரத்தில், மதிப்புக்கூட்டு வரி எனப்படும் VAT 0.4 சதவீதப் புள்ளிகளால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆனால், அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் குறைக்கப்பட்ட VAT விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலப்பு நிதி மாதிரி, மாநிலங்கள் சபை முன்வைத்த யோசனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இணக்கக் குழுவில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த முன்மொழிவு 15க்கு 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
13வது AHV ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் வாக்களித்து ஒப்புதல் அளித்திருந்தாலும், அதற்கான நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வந்தது.
இப்போது இந்த சமரசத் திட்டம் முதலில் மாநிலங்கள் சபையிலும், பின்னர் தேசிய மன்றத்திலும் பரிசீலிக்கப்பட உள்ளது. இரு அவைகளும் ஒப்புதல் வழங்கினால், 13வது AHV ஓய்வூதியத்திற்கான நிதி அமைப்பு இறுதியாக உறுதி செய்யப்படும்.
ஓய்வூதியத்தை அதிகரிக்கும் திட்டம் மக்களுக்கு நன்மையா? அல்லது வரி மற்றும் பங்களிப்பு உயர்வு கூடுதல் சுமையா? இந்த விவாதம் சுவிஸ் அரசியலில் தொடர்ந்து சூடுபிடித்துள்ளது.





