பேர்ன் கன்டோனில் ஆன்லைன் போலீஸ் சேவை தொடக்கம்: மக்கள் நேரடியாக நிலையத்துக்கு செல்ல தேவையில்லை சுவிட்சர்லாந்தின் பேர்ன் கன்டோன் பகுதியில் போலீஸ் சேவைகளை எளிதாக்கும் நோக்கில், Kantonspolizei Bern வரும் ஏப்ரல் 2026 தொடக்கத்தில் “ஆன்லைன் போலீஸ் நிலையம்” என்ற புதிய பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், பொதுமக்கள் சாதாரண போலீஸ் தொடர்பான தேவைகளை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு சென்று செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், இணையத்தின் மூலம் முடிக்க முடியும். குறிப்பாக, அடையாள ஆவணங்களை இழந்ததாக புகார் அளிப்பது போன்ற சேவைகள் இதுவரை நேரில் செல்ல வேண்டியிருந்த நிலையில், இப்போது ஆன்லைன் வழியாக எளிதாக செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ePolice எனப்படும் தேசிய டிஜிட்டல் தளத்தின் மூலம் வழங்கப்படும். இதன் மூலம், மக்கள் முன்பதிவு செய்து வீடியோ அழைப்பு (Teams) வழியாக போலீசாருடன் தொடர்பு கொண்டு, தகவல் கேட்குதல், ஆவண இழப்பு புகார் அளித்தல் அல்லது எளிய வழக்குகளில் புகார் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த பைலட் திட்டத்தின் முதல் கட்டத்தில், பேர்ன் கன்டோனில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களுக்கே இந்த சேவை வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஆலோசனைகளை நடத்தும் போலீசாரும் பிரெஞ்சு மொழியில் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே நேரம் பதிவு செய்ய வேண்டும். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டு வீடியோ ஆலோசனைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூத்தியேர் பகுதி ஜூரா கன்டோன் உடன் இணைந்த பின்னணியிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு வருட காலத்திற்கு சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த சேவை, அதன் பயன் மற்றும் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், பேர்ன் கன்டோனின் முழு மக்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். சுவிட்சர்லாந்தில் டிஜிட்டல் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், போலீஸ் சேவைகளும் அதே பாதையில் முன்னேறுவது மக்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. © Kapo BE