சான் கோத்தார்ட் சுரங்கத்தில் கடும் விபத்து: நெதர்லாந்து நபர் உயிர் ஆபத்தான நிலையில்
சான் கோத்தார்ட் சுரங்கத்தில் கடும் விபத்து: நெதர்லாந்து நபர் உயிர் ஆபத்தான நிலையில்
சுவிட்சர்லாந்தின் டிசினோ கன்டோனில் (Tessin) உள்ள Airolo பகுதியில், திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு பிறகு கடுமையான சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆரம்ப தகவல்களின்படி, நெதர்லாந்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவர், சுவிட்சர்லாந்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான A2 நெடுஞ்சாலையில், San Gottardo Tunnel வழியாக வடக்கு திசை நோக்கி பயணித்து வந்துள்ளார்.
போலீசார் மேற்கொள்ளவுள்ள விசாரணையில் தான் விபத்துக்கான துல்லிய காரணம் தெரியவரும் என்றாலும், சுரங்கத்தின் 54வது நிசா பகுதியில் அந்த நபர் திடீரென வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அவரது கார் நேருக்கு நேர் சுரங்கச் சுவரில் மோதி கடுமையாக சேதமடைந்துள்ளது.
முதற்கட்ட மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில், விபத்தில் படுகாயமடைந்த 47 வயதுடைய அந்த நபரின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்தவுடன், கன்டோனல் போலீசார், சான் கோத்தார்ட் மீட்பு மையத்தின் (CIG) தீயணைப்பு வீரர்கள் மற்றும்மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், காயமடைந்தவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினால், சம்பவ இட ஆய்வு, மீட்பு நடவடிக்கைகள், சாலை சீரமைப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வசதியாக, சான் கோத்தார்ட் சுரங்கம் இரு திசைகளிலும் குறைந்தது செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக, வாகனங்கள் சான் பெர்னார்டினோ (San Bernardino) வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
ஐரோப்பாவை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழிகளில் ஒன்றான சான் கோத்தார்ட் சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த விபத்து, இரவு நேரப் போக்குவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஓட்டுநர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
© KeystoneSDA






