ரோம் விமான நிலையத்தில் 19.5 கிலோ கஞ்சாவுடன் சுவிஸ் நபர் கைது
ரோம் விமான நிலையத்தில் 19.5 கிலோ கஞ்சாவுடன் சுவிஸ் நபர் கைது

ரோம் விமான நிலையத்தில் 19.5 கிலோ கஞ்சாவுடன் சுவிஸ் நபர் கைது
இத்தாலியின் ரோம்-ஃபியூமிசினோ (Rome-Fiumicino) விமான நிலையத்தில் 19.5 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Guardia di Finanza வெளியிட்ட தகவலின்படி, குறித்த போதைப்பொருட்கள் அவர் ஒப்படைத்திருந்த பயணப்பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இவர் தாய்லாந்தின் பாங்காக் (Bangkok) நகரிலிருந்து வந்திருந்ததாக இத்தாலிய செய்தி நிறுவனம் Adnkronos தெரிவித்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து வரும் சில பயணிகள் தொடர்பாக “குறிப்பிட்ட ஆபத்து காரணிகள்” கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு தாய்லாந்தில் கஞ்சா தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டதிலிருந்து, இத்தாலிக்கான போதைப்பொருள் கடத்தல் கணிசமாக அதிகரித்துள்ளதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

குற்றவியல் குழுக்கள் கஞ்சாவை வெற்றிட பொதிகளாக (vacuum-sealed) அடைத்து, பயணப்பெட்டிகளில் அதிகளவில் அடுக்கக்கூடிய வகையில் தயாரிப்பதுடன், சரக்குகளை கண்காணிக்க Geolocation சாதனங்களையும் பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2024 முதல் 2026 வரையிலான காலத்தில், ரோம் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் நடவடிக்கைகளின் மூலம் 35 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன், 830 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. © SDA





