Swatch புதிய கடிகார விற்பனையில் பரபரப்பு – பாசல் மற்றும் லௌசானில் போலீஸ் தலையீடு
Swatch புதிய கடிகார விற்பனையில் பரபரப்பு – பாசல் மற்றும் லௌசானில் போலீஸ் தலையீடு

Swatch புதிய கடிகார விற்பனையில் பரபரப்பு – பாசல் மற்றும் லௌசானில் போலீஸ் தலையீடு
Swatch மற்றும் Audemars Piguet இணைந்து அறிமுகப்படுத்திய புதிய “Royal Pop” கடிகாரத் தொகுப்பின் விற்பனை பல இடங்களில் பரபரப்பாக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் மோதல்களால் போலீசார் தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குறிப்பாக பாசல் (Basel) மற்றும் லௌசான் (Lausanne) நகரங்களில் புதிய கடிகாரங்களை வாங்க மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்த நிலையில் பதற்றமான சூழ்நிலை உருவானதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்த நிலையைத் தொடர்ந்து Swatch நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டது. அதில் “பொது பாதுகாப்பு காரணங்களால் ஜெனீவா (Genève) Rue du Marché பகுதியில் உள்ள எங்கள் கடை, அதேபோல் லௌசான் மற்றும் பாசல் நகரங்களில் உள்ள கடைகளும் இன்று மூடப்பட்டிருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய Royal Pop தொகுப்பு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வந்ததால், உலகம் முழுவதும் சேகரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தைத் தாண்டியும் பல நாடுகளில் விற்பனை நடவடிக்கைகள் பதற்றமாக மாறியுள்ளன. குறிப்பாக இத்தாலியின் மிலான் (Milano) நகரிலும், பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் பல கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சில், குறிப்பாக பாரிஸ் புறநகர் பகுதியில் அமைந்துள்ள Westfield Parly 2 வணிக மையத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடை திறக்கப்படும் முன்பே சுமார் 300 பேர் அங்கு கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் போலீசார் கண்ணீர் புகை பயன்படுத்தி கூட்டத்தை கலைத்ததாக AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த Swatch கடையின் விற்பனை முழுமையாக ரத்து செய்யப்பட்டதாகவும், மாற்று தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பதிப்பில் வெளியிடப்படும் ஆடம்பர கடிகாரங்களுக்கான உலகளாவிய போட்டி மற்றும் மறுவிற்பனை சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் எதிர்பார்ப்பு ஆகியவையே இந்த குழப்பங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன.





