Swiss News In Tamil

சார்கான்ஸில் புத்தாண்டிலும் சத்தமுள்ள பட்டாசுகளுக்கு தடை

சார்கான்ஸில் புத்தாண்டிலும் சத்தமுள்ள பட்டாசுகளுக்கு தடை

2025–2026 புத்தாண்டு மாற்றத்தின் போதும் சுவிட்சர்லாந்தின் Sargans நகராட்சியில் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என நகராட்சி சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்ததும் புத்தாண்டு இரவு வேகமாக நெருங்கி வருகிறது. புதிய வருடத்தை வரவேற்கும் அந்த நள்ளிரவு பலருக்கும் நம்பிக்கையும் கனவுகளும் நிறைந்த ஒரு சிறப்பு தருணமாக கருதப்படுகிறது. ஆனால் சார்கான்ஸ் நகரத்தில், இந்த இரவு வழக்கமான வெடிகள், பட்டாசுகள், சத்தமூட்டும் ராக்கெட்டுகள் இன்றி அமைதியாகவே கொண்டாடப்படும்.

2023 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள காவல் விதிமுறைகளின் படி, நகராட்சியின் முழுப் பகுதியிலும் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையின் நோக்கம் இயற்கை சூழல், வனவிலங்குகள் மற்றும் குறிப்பாக வீட்டுப் பிராணிகளை பாதுகாப்பதோடு, சார்கான்ஸின் பாரம்பரிய புத்தாண்டு வழக்கத்திற்கும் உரிய இடம் வழங்குவதாக நகராட்சி தெரிவித்துள்ளது.

என்றாலும், பட்டாசுகள் இல்லையென்றாலும் சார்கான்ஸில் புத்தாண்டு இரவு முற்றிலும் அமைதியாக இருக்காது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை, தேவாயலம் ஒன்று பழமையான புத்தாண்டு பாடல் பாடும் மரபை தொடர்ந்து வருகிறது. அதன் உறுப்பினர்கள் துல்லியமாக நள்ளிரவில் நகர மையத்தில் உள்ள தேவாலய வளாகத்தில் கூடி, பின்னர் நகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பாடல்களைப் பாடுகின்றனர்.

இவ்வாறு சத்தமூட்டும் பட்டாசுகளை வானில் ஏவுவதற்குப் பதிலாக, நள்ளிரவு சமயத்தில் நகர மையத்தை நோக்கி நடைபயணம் செய்து, பாரம்பரிய இசையும் பாடல்களும் ஒலிக்கும் சூழலில் புதிய ஆண்டை வரவேற்கலாம் என நகராட்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது அமைதியும் மரபும் ஒன்றிணையும் ஒரு தனித்துவமான புத்தாண்டு அனுபவமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button