ஜெனீவாவில் கார் இல்லா வாழ்க்கையை ஊக்குவிக்கும் புதிய முயற்சி : பங்கேற்பாளர்களுக்கு 500 பிராங்க் ஊக்கத் தொகை
ஜெனீவாவில் கார் இல்லா வாழ்க்கையை ஊக்குவிக்கும் புதிய முயற்சி : பங்கேற்பாளர்களுக்கு 500 பிராங்க் ஊக்கத் தொகை
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா கன்டோனில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயண முறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. “Déclic Mobilité” (டெக்லிக் மோபிலிடே) என்ற திட்டத்தின் மூலம், ஒரு மாத காலத்திற்கு தங்கள் தனிப்பட்ட கார்களை பயன்படுத்தாமல் வாழ தயாராக உள்ள குடியிருப்பாளர்களுக்கு 500 சுவிஸ் பிராங்க் மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை Modus Foundation என்ற அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முயற்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் ஒரு மாத காலத்திற்கு தங்கள் கார்களை வீட்டிலேயே நிறுத்தி வைத்து, அதற்குப் பதிலாக பொதுப் போக்குவரத்து, சைக்கிள் வாடகை, அல்லது கார் பகிர்வு சேவைகள் போன்ற மாற்று போக்குவரத்து முறைகளை பயன்படுத்த ஒப்புக்கொள்கிறார்கள்.
பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் 500 பிராங்க் வவுச்சர் பொதுப் போக்குவரத்து பாஸ் வாங்குவதற்கோ, சைக்கிள் வாடகைக்கு எடுப்பதற்கோ அல்லது car-sharing சேவைகளை பயன்படுத்துவதற்கோ பயன்படுத்த முடியும். இதன் மூலம் மக்கள் தினசரி பயணங்களில் தனியார் கார் மீது இருக்கும் சார்பை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து முறைகளை முயற்சி செய்து பார்ப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் மக்களின் பயண பழக்கவழக்கங்களில் மாற்றத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், பயண முறைகள் குறித்த அநாமதேய (அடையாளம் தெரியாத) தரவுகளையும் சேகரித்து ஆய்வுகளுக்கு பயன்படுத்துவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகள் எதிர்காலத்தில் நகர திட்டமிடல் மற்றும் நிலையான போக்குவரத்து கொள்கைகளை வடிவமைக்க உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.
கடந்த ஆண்டு ஜெனீவா நகரத்தில் 72 குடும்பங்களை கொண்டு ஒரு முன்னோடி திட்டமாக இந்த முயற்சி நடத்தப்பட்டது. அந்த முயற்சி நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இப்போது இந்த திட்டம் முழு ஜெனீவா கன்டோன் முழுவதும், கிராமப்புற பகுதிகளையும் சேர்த்துக் கொண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து துறையிலிருந்து ஏற்படும் கார்பன் உமிழ்வை குறைப்பது அரசாங்கத்திற்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் முக்கிய இலக்காக உள்ளது. அதனால் பொதுப் போக்குவரத்து, சைக்கிள் பயன்பாடு மற்றும் கார் பகிர்வு போன்ற மாற்று போக்குவரத்து முறைகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றன. இந்த “Déclic Mobilité” முயற்சியும் அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. WRS






