Swiss News In Tamil

சிறப்பு கைக்கடிகார தயாரிப்பு மூலம் டொனால்ட் டிரம்ப்பிற்கு பதிலடி கொடுத்த Swatch நிறுவனம்

சிறப்பு கைக்கடிகார தயாரிப்பு மூலம் டொனால்ட் டிரம்ப்பிற்கு பதிலடி கொடுத்த Swatch நிறுவனம்

சுவிட்சர்லாந்தின் பிரபல கைக்கடிகார உற்பத்தி நிறுவனமான Swatch (சுவாட்ச்), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 39% இறக்குமதி வரி சர்ச்சையை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித்துவமான சிறப்பு பதிப்பு கைக்கடிகாரத்தை வெளியிட்டுள்ளது. ‘39% வாட்ச்’ என்று அழைக்கப்படும் இந்த மாடல், வடிவமைப்பில் பல  வித்தியாசங்களை கொண்டுள்ளது.

டயலில் உள்ள 3 மற்றும் 9 எண்கள் மாற்றி இடம் பெற்றுள்ளதால், 39 என்ற எண் தெளிவாகக் கண்களில் படும். மேலும் பின்புற பேட்டரி மூடியில் சிறிய “%” குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்சின் விலை 139 சுவிஸ் பிராங்க் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலையே கூட 39% வரியை சுட்டும் வகையில் நையாண்டியாக அமைந்துள்ளது. Swatch நிறுவனம் இதை Limited Edition ஆக மட்டுமே வெளியிட்டுள்ளது. தற்போது இது சுவிட்சர்லாந்தின் 11 Swatch கிளைகளிலும் மற்றும் ஆன்லைனிலும் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

Swatch குழுமத்தின் பேச்சாளர் ஊடகங்களுக்கு அளித்த தகவலில், “அமெரிக்கா விதித்துள்ள இந்த அதிக வரி தற்காலிகமானதே என்று நாங்கள் நம்புகிறோம். அந்த வரி மாற்றப்பட்டவுடன், இந்த ‘39%’ வாட்ச் விற்பனையை உடனடியாக நிறுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

இந்த முடிவு சுவிஸ் பொருளாதாரத்துக்கும், குறிப்பாக கைக்கடிகார உற்பத்தி துறைக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் Swatch நிறுவனம் இந்த சர்ச்சையை நகைச்சுவை கலந்த ஒரு வணிக வாய்ப்பாக மாற்றி, உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் ஒரு சிறப்பு கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பலரும் Swatch நிறுவனத்தின் படைப்பாற்றலையும் வணிக புத்திசாலித்தனத்தையும் பாராட்டி வருகின்றனர்.

© KeystoneSDA

Related Articles

Back to top button