Swiss News In Tamil

சுவிசில் வாழ்ந்தால் இப்படித்தான் வாழணும்… ஆச்சரியப்படவைக்கும் உண்மைகள்

சுவிசில் வாழ்ந்தால் இப்படித்தான் வாழணும்… ஆச்சரியப்படவைக்கும் உண்மைகள்

சுவிட்சர்லாந்து என்ற நாடு எப்பவுமே தனித்துவத்திற்கு சான்றாக விளங்கும் ஒரு நாடு என்பது நம்மில் பலருக்கு தெரியும். வேறு எந்த நாட்டிலும் இல்லாத பல விடயங்களை நாம் இந்த நாட்டில் அனுபவிக்க முடியும். இங்கு உள்ளவர்களுக்கு இதெல்லாம் ஒரு சாதாரணமாக பழகிப்போன ஒரு விடயமாக இருந்தாலும் வேறு நாட்டில் இருந்து சுற்றுலா நிமித்தம் தங்கியிருப்பவர்களுக்கும் அல்லது குடியுரிமை நோக்கிலோ வேலை நிமித்தமோ தங்கவிருப்பவர்களுக்கும் இங்குள்ள விடயங்கள் நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

சுவிட்சர்லாந்தில் இயற்கை முதல் இங்குள்ள சட்டஒழுங்கு மற்றும் வாழ்க்கை முறைய பலரை ஆச்சரியத்தில் ஆழ்ந்தும். அப்படி இந்தியாவில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா வந்து தங்கிய ஒருவரது அனுபவ குறிப்புகளை பகிர்கிறது இன்றைய இந்தப்பகுதி. இதில் குறிப்பிடப்படும் விடயங்கள் சுவிசில் உள்ளவர்களுக்கு சாதாரண விடயமாக இருந்தாலும் வேறு நாட்டில் இருந்து இதைப்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு சுவாரசிய அனுபமாக இருக்கும்.

இந்தியாவைப்பொறுத்தமட்டில் ‘மலை நாடு’ என்று நமது கேரள மாநிலத்தை அழைப்போம் – அங்கு மலைகளும், குன்றுகளும் அதிகமாக இருப்பதால்.சுவிட்சர்லாந்தோ, உலகத்தின் உயர்வான மலைநாடு. அந்த மலைகளை இயற்கை எழிலுடன் அப்படியே பாதுகாத்து, அதே சமயத்தில் தங்கள் வாழ்விடமாக்கிக் கொண்டுள்ள மக்களின் உழைப்பையும், அவர்களின் உன்னதப் புரிதலையும் கண்டு வியப்பே மேலிடுகிறது.

பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா, லீக்டன்ஸ்டீன் ஆகிய நாடுகளைத் தமது எல்லைகளாகக்கொண்ட சுவிசின் பரப்பளவு 41,285 ச.கி.மீ. மக்கட்தொகையோ 9 மில்லியன்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. ஜெர்மன், பிரெஞ்ச், இத்தாலியன், ரொமன்ஷ் மற்றும் ஆங்கில மொழிகளைப் பேசுகின்றனர். ஆங்கிலம் வணிகத்திற்கும், சுற்றுலாவுக்கும் மட்டுமே! நாட்டை 26 மண்டலங்களாகப் (cantons) பிரித்து நிர்வாகம் செய்கின்றனர்.

மக்கட்தொகை குறைவாக உள்ளதாலோ என்னவோ, நிறைய வேலைகளுக்கு எந்திரங்களை உபயோகிக்கிறார்கள். மலையில் மின் கம்பம் நட ஹெலிகாப்டர் உபயோகித்ததையும், எதிரிலிருந்த வீட்டின் 5 வது மாடியிலிருந்து பொருட்களை இறக்க, தற்காலிக சாய்தள லிப்ட் பயன்படுத்துவதையும் இங்குதான் காணமுடியும்.

மலைகளின் அழகு கெடாமல் அவற்றை அப்படியே வைத்து,வீடுகளைக் கட்டியுள்ளார்கள்;கட்டியும் வருகிறார்கள். பெரும்பாலும் ஐந்தாறு மாடிகளைக் கொண்ட வீடுகளே அதிகம். நியூயார்க் போன்று வானளாவ வளர்ந்து நிற்கும், நூறு மாடிக் கட்டிடங்களை இங்கு காண்பது அரிது. வரவேற்பறை, சமையல் அறையுடன் 2,3,4 என்று பெட் ரூம்கள் கொண்ட வீடுகளே அதிகம். ஒவ்வொரு பிளாட்டிலும் 10,15 வீடுகள் இருக்கின்றன. வீடுகளின் உள்ளேயே தனியாக ‘ஸ்டோர் ரூம்கள்’ உள்ளன. ஒவ்வொரு பிளாட்டின் அடித்தளத்தில் ‘வாஷிங் ரூம்கள்’ உள்ளன.

தேவைக்கேற்ப வாஷிங் மெஷின்களும், டிரையர்களும் உண்டு. பக்கத்தில் துணிகளை உலர்த்த இரண்டு பெரிய அறைகளும், ராட்சத ஃபேன்களும், காய வைக்கக் கம்பிக் கொடிகளும் உள்ளன. எந்தக் குடும்பத்தினர் எந்தத் தேதியில் உபயோகிப்பது என்ற அட்டவணையையும் அங்கேயே ஒட்டி வைத்து விடுகிறார்கள். ஒவ்வொருவரும் உபயோகித்த பிறகு அந்த மெஷின்களையும் அறைகளையும் சுத்தப்படுத்தி விடுகிறார்கள்.

அடித்தளத்தில் பழுதான, எப்போதோ உபயோகிக்கும் பொருட்களைப் பாதுகாக்க ‘கெல்லர்’ (Keller) என்ற சிறு அறைகளை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒதுக்கியுள்ளார்கள். அவை காற்றோட்டம் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, நாம் விமானப் பயணம் மேற்கொள்கையில் பயன்படுத்தும் பெரிய சூட்கேஸ்கள் போன்றவற்றை இந்த கெல்லர்களில் வைத்துக் கொள்ளலாம். அதனை ஒட்டி,குழந்தைகள் ஓட்டி விளையாடி மகிழும் சிறு சைக்கிள்கள், சிறு குழந்தைகளை வைத்துத் தள்ளும் வண்டிகள், பெரியவர்கள் பயன்படுத்தும் சைக்கிள்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைக்கப் பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கார்களை நிறுத்த வீட்டின் கீழேயே அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் லாட்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையிலும் கோடுகள் போட்டு,கார்களை நிறுத்த வழி செய்துள்ளார்கள்.எந்தக் காரும்,எந்தச் சமயத்திலும் கோடுகளைத்தாண்டி வெளியில் நிறுத்தப்படுவதில்லை. எங்கு,எப்போது காரை நிறுத்தினாலும் நாம் விரும்பும் நேரத்தில் எந்தத் தடங்கலும் இன்றி எடுக்கவும் முடியும்.

கிச்சனில் மின்சார அடுப்புகளே உள்ளன. அழுத்தமான கண்ணாடி அடைப்புக்குக் கீழே ஒளிரும் அவற்றைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். எந்த விதத்திலும் தீ விபத்துக்கு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. ’பார்பிக்யூ’ செய்ய ஏரி,மற்றும் ஆற்றுக் கரைகளில் மட்டுமே நெருப்பு எரிவதைக் காண முடிகிறது. வீட்டிலுள்ள அனைத்துக் குழாய்களிலும் ஒரே மாதிரியான குடிநீரே வருகிறது.குழாயைத் திறந்து ரைட்டில் திருப்பினால் கைகள் நடுங்கும் அளவுக்குக் குளிர்ந்த நீர்! லெப்டில் திருப்பினால் பொறுக்க முடியாத அளவுக்குச் சுடு நீர்! எந்த நீரென்பதும்,எவ்வளவு சூடு,குளிர்ச்சி என்பதும் நமது சாய்ஸ்!.

குளிர்ப்பிரதேசம் என்பதால் கதவுகளின் இரு புறமும் கண்ணாடி அமைப்புகள் உண்டு.மெயின் என்ட்ரன்சில் பெரிய கண்ணாடிக் கதவு.அதைத் திறந்து கொண்டு உள்ளே வந்தால் லிப்ட்.ஒரு வேளை நாம் சாவியை மறந்து விட்டால், கீழே நமது வீட்டிற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள தபால் பெட்டியும் அதற்கு அருகே ஒரு பட்டனும் உண்டு. பட்டனை அழுத்தினால் ,நமது வீட்டில் உள்ள அமைப்பில் விளக்கு எரிவதுடன் பீப் ஒலியும் கேட்கும். அந்த பட்டனை அழுத்தினால் கீழே கதவு திறந்து கொள்ளும். இந்த வசதிகள் அனைத்தும் பல வருடங்களுக்கு முன்பிலிருந்தே இங்கு பயன்பாட்டில் உள்ளன.

ஆங்காங்கே, சிறிதாகவும்,பெரிதாகவும் பார்க்குகள் உள்ளன. சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள் அங்கு ஏகமாக உண்டு. சிறுவர்கள் மணலில் விளையாட ஏதுவாக,திட்டுகளை உருவாக்கி, அதில் மணலை நிரப்பி வைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் கடைசியாக விளையாடிச் செல்பவர்கள் மணல் திட்டை சுத்தப்படுத்தி, அதற்கான வலையை மேலே விரித்து விடுகிறார்கள். வலை காற்றில் பறக்காமல் இருக்க வலையின் ஓரத்தில் சிறு இரும்புக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது நல்ல யுக்தி.

வீடுகளுக்குப் பெரும்பாலும் ஒரே விதமான வண்ணத்தையே பூசுகிறார்கள். அவையும் லைட்டாகவே உள்ளன.வீடுகள் அழகாகவும்,தேவைக்கேற்பவும், நவீன வசதிகளுடனும் உள்ளன.பொதுவிடங்களில் உள்ள மின்சார விளக்குகள்தானியங்கி முறையில், சென்சார்கள் மூலம் இயங்குகின்றன. தேவைப்படும்போது மட்டுமே பயன்படுவதால்,மின்சாரச் சிக்கனம் கடைபிடிக்கப்படுகிறது.

வாழ்க்கை முறை என்று பார்த்தால்,அனைவருமே தினசரி நடைப்பயிற்சி,சைக்கிளிங்,ஸ்விம்மிங்,விளையாட்டு என்று வயது வித்தியாசமின்றி, தங்களை பிஸியாகவே வைத்துக் கொள்கின்றனர். 2021 ஆண்டு கணக்கெடுப்பின் படி இங்குள்ளவர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு (life expectancy) 83.97 வருடங்கள் – 84 ஆண்டுகள் என்று வைத்துக் கொள்ளலாம். விசு சார் தனது ‘சம்சாரம் அது மின்சாரம்’ க்ளைமாக்சில் இதே கருத்தை வலியுறுத்தி வசனம் வைத்திருப்பார். வணக்கம் சொல்லாமலோ,புன்முறுவல் பூக்காமலோ யாரும் கடந்து செல்வதில்லை. குழந்தைகளை மிகுந்த சுதந்திரம் கொடுத்து வளர்க்கிறார்கள்.

நம்மூரில் கோடை காலத்தில் திருவிழாக்கள் நடத்துவதைப்போல, இங்கும் ‘கார்னிவல்’ என்ற பெயரில் பெரும் விழாக்களை நடத்துகிறார்கள். 2,3 நாட்கள்,ஒரு வாரம் என்று விழாக்களின் காலம் மாறுபடுகிறது.சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உற்சாகமுடன் கலந்து கொள்கின்றனர்.அது நம் தீவுத் திடலில் நடக்கும் விழாவைப் போலவே உள்ளது.

எவ்வளவு பனியும்,குளிரும் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது அவரவர் பணியை எந்தத் தடங்கலுமின்றிச் செய்கின்றனர். போக்குவரத்து என்று வருகின்றபோது, சாலை, நீர்,வான் வழி,ரயில் என்று அனைத்தையுமே பயன்படுத்துகின்றனர். சாலைகளில் டூ வீலர்கள், கார்கள், பஸ்,   இணைந்த பஸ்கள், ட்ராம் ஆகியவை பயணத்திற்குப் பயன்படுகின்றன.

’பீக்’ அவர்ஸ் என்றழைக்கப்படும் பிசியான நேரங்களில் மட்டுமே ரயிலில் ஐந்தாறு பெட்டிகள்இருக்கும். மற்ற நேரங்களில் மூன்று பெட்டிகள் மட்டுமே. ஏரிகளில் ‘க்ரூஸ்’என்றழைக்கப்படும் பெரும் படகுகள் பிரயாணத்திற்கென சென்று வருகின்றன. அவற்றில் கார்களையும் ஏற்றிச் செல்லும் வசதிகளும் உள்ளன. எல்லாப் போக்குவரத்துச் சாதனங்களுமே சிறிதும் தாமதமின்றி அட்டவணை நேரப்படி இயக்கப்படுகின்றன.நம்மூரைப்போல் ‘பாஸ்’வசதிகளும் உள்ளன. ஒரே பாஸில் அத்தனை வகையான சாதனங்களிலும் பயணிக்கலாம்.

நம்மூரைப் போலல்லாது இங்கு வாகனங்களை வலது புறம் இயக்குகின்றனர். சாலையில் உள்ள வேகம் குறித்த அறிவிப்புகள் டிஜிட்டல் முறையில் இயக்கப்படுகின்றன.சாலைகள் ஓரளவுக்கு ப்ரீயாக இருக்கையில் 100 கி.மீ., காட்டும் அதே அறிவிப்புப் பலகை,வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது,80,60 என்று மாறி,வாகனத் தேக்கத்தைத் தடை செய்துவிடும்.  விதியை மீறினால், வீட்டிற்கு ஆன்லைனில் அபராதம் கட்டக் கூறும் பில் வந்து விடும். நம்மூரைப்போல் அரசியல்வாதிகளைத் தெரியும், அதிகாரிகளைத் தெரியும், நானே பெரிய ஆள்! என்ற எதுவும் எடுபடாது.

சாலைகளில் சோறு போட்டுச் சாப்பிடலாம்! அவ்வளவு சுத்தம்! அவ்வளவு சமதளம். சாலையைக் கடக்க நாம் நிற்பதைப் பார்த்தாலே வாகன ஓட்டிகள் நிறுத்தி, நமக்கு வழி விடுகிறார்கள். மலை நாடாக இருந்தாலும், ஆங்காங்கே மலைகளைக் குடைந்து அற்புதமான சாலைகளை அமைத்திருக்கிறார்கள். அவர்களின் தொழில் நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது. அருகில் வீடுகள் உள்ள பகுதிகளில், சப்தத்தைக் குறைக்க சாலையின் ஓரத்தில், மேலே பைபராலான தடுப்புகளைப் பொருத்தியுள்ளார்கள். எல்லாவிதத்திலும் மக்களின் நலத்திற்கும், அமைதிக்குமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள்!

மலைகளின் மீது பனி சறுக்கும்,க்ளைடர்களில் பறப்பதும் அதிகப் பொழுது போக்காகத் தென்படுகிறது. உலகச் சுற்றுலாத் தளங்களென வகைப்படுத்தப்பட்டு, அதிக மக்களைக் கவரும் இடங்களுக்கு, லோக்கலில் உள்ளவர்கள் செல்வதை, அவர்களாகவே குறைத்துக் கொள்கிறார்கள். தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் எவ்விதச் சிரமத்திற்கும் ஆளாகக் கூடாது என்ற எண்ணம் காரணமாக.

பொதுவிடங்களில் பொருட்கள் வாங்கவோ, பில் கட்டவோ க்யூவில் நிற்கையில், ஒரு வேளை நாம் ஓரமாக நின்றாலுங்கூட, நாம் அந்தக் க்யூவில்தான் நிற்கிறோமோ என்ற சந்தேகத்தில் நம்மிடம் கேட்ட பிறகே,பின்னால் உள்ளவர்கள் முன்னேறுகிறார்கள்.  இப்படிப்பட்ட செல்வச்செழிப்பான ஒரு நாட்டில் வாழும் பாக்கியம் கிடைக்க உண்மையில் தமிழர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

நன்றி :-  ரெ.ஆத்மநாதன்,

Related Articles

Back to top button