115 பயணிகளுடன் சுவிஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
115 பயணிகளுடன் சுவிஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
115 பயணிகளுடன் சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சேர்பியா தலைநகர் பெல்கிரேடில் இருந்து சூரிச்சிற்கு புறப்பட்ட Swiss Air நிறுவனத்தின் LX1413 எனும் விமானம், திங்கட்கிழமை காலை புறப்பட்டு சில நேரத்தில் பின்னர் பொது அவசர நிலையை அறிவித்தது.
Airbus A220-300 வகையைச் சேர்ந்த இந்த விமானத்தின் கொக்பிட் cockpit பகுதியில் கோளாறு (Error) தகவல்கள் பதிவானதுடன், விமானத்தின் பின்பக்கக் கேபினில் சற்றே புகை தெரிந்ததாக சுவிஸ் விமான சேவை நிறுவனம் பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, விமானத்தினர் அதிகபட்சமாக பாதுகாப்பான அருகிலுள்ள விமான நிலையத்திற்கு திருப்ப முடிவு செய்தனர். Flightradar24 இணையதள தகவலின்படி, விமானம் ஜெர்மனியின் பிரைட்ரிச்சயபென் Friedrichshafen நகரத்திற்கு திருப்பப்பட்டது.

விமானத்தில் 115 பயணிகளும், 5 விமான பணியாளர்களும் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விமானம் சீராக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் வழக்கமான படிக்கட்டுகள் வழியாக வெளியேறியதாகவும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மருத்துவ குழுவினர் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும், பயணிகளை சூரிச் நகருக்கே பஸ்களில் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்துக்கு மன்னிப்பு தெரிவித்துள்ள சுவிஸ் விமான சேவை Swiss Air நிறுவனம், விமான கோளாறு தொடர்பான முழுமையான விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், பயணிகள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உதவ ஒரு சிறப்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.





