ஆர்காவ் வெடிப்பு சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன.?
ஆர்காவ் வெடிப்பு சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன.? தொடரும் விசாரணை
ஆர்காவ் மாகாணத்தில் உள்ள நுஸ்பாமென் நகரில் பாரிய மர்மமான வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன.
அடுக்குமாடி குடியிருப்புக்கு கீழே உள்ள நிலத்தடி கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
இது பட்டாசு வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என ஆர்காவ் போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் ஒரு சிலர் இரண்டு டெஸ்லா கார்களின் பெட்டரி வெடித்ததினால்தான் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கின்றனர். கார் பெட்டரியின் வெடிப்பால் இவ்வளவு பாரிய சேதம் ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தளத்திற்கு அருகில் கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக் பாகங்கள் A4 வானவேடிக்கையின் பாகங்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர். இவை தொழில்முறை பட்டாசுகள் எனவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்தவை எனவும் தெரிவிக்கின்றனர்.

அவை பொதுவாக உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன எனவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே அவ்வகை பட்டாசுகளை சேமிக்கப்பட வேண்டும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அப்படியான பட்டாசுகளின் பாகங்கள் எப்படி இந்த கட்டிடத்துக்குள் வந்தது எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ள கன்டோனல் வழக்குரைஞர் அலுவலகம்இ இதுவரை கிடைத்த முடிவுகளின் படி இது ஒரு திட்டமிட்ட செயலாக இருக்க வாய்ப்பில்லை எனவும் விபத்து சம்பவமாகவே இருக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளது.
எது எவ்வாறாயினும் குறித்த வெடிப்பு சம்பவத்தின் பின்னர் அக்கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பல குடும்பங்கள் இன்னும் அவர்கள் குடியிருப்புகளுக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





