வலைஸ் கன்டோனில் முதியவர்களை குறிவைக்கும் தொலைபேசி மோசடிகள் அதிகரிப்பு
வலைஸ் கன்டோனில் முதியவர்களை குறிவைக்கும் தொலைபேசி மோசடிகள் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தின் வலைஸ் கன்டோனில் சமீப வாரங்களில் “ஷாக் மோசடி” என அழைக்கப்படும் தொலைபேசி மோசடிகள் அதிகரித்து வருவதாக வலைஸ் கன்டோனல் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோசடிகள் பெரும்பாலும் வயதான மக்களை குறிவைத்து நடைபெறுகின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் இதுவரை பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் குற்றவாளிகள் தங்களை காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் அல்லது பேரன்-பேத்திகள் என கூறி முதியவர்களை ஏமாற்றி பணம் அல்லது மதிப்புள்ள பொருட்களை பறித்து செல்ல முயற்சித்துள்ளனர். இதுவரை பதிவான நான்கு மோசடி சம்பவங்களில் பல இலட்சம் சுவிஸ் பிராங்க் மதிப்பிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த மோசடி முறைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக காவல்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக முதியவர்களுக்கு ஆதரவளிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் இந்த அபாயம் குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளில் பொதுவாக குற்றவாளிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்கிறார்கள். தங்களை காவல்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி, உங்கள் உறவினர் கடுமையான விபத்தில் சிக்கியுள்ளார், கைது செய்யப்படாமல் இருக்க உடனடியாக காப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்டவர்களை பதற்றத்தில் ஆழ்த்துகின்றனர். சில நேரங்களில் அவர்கள் தங்களை மருத்துவராக கூறி, உங்கள் உறவினர் மருத்துவமனையில் உள்ளார், காப்பீட்டில் சேராத மிகவும் விலையுயர்ந்த சிகிச்சை அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள்.
மற்றொரு முறையில், மோசடிக்காரர்கள் தங்களை உறவினர் அல்லது மருமகன் என கூறி தொடர்பு கொண்டு, ஒரு சொத்து வாங்கும் ஒப்பந்தம் அல்லது வணிக ஒப்பந்தத்தை நிறைவேற்ற அவசரமாக பணம் தேவைப்படுகின்றது என்று கூறி பணம் கேட்கின்றனர். இந்த உரையாடலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு யோசிக்க நேரமளிக்காமல் உடனடியாக பணம் அல்லது மதிப்புள்ள பொருட்களை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
மோசடிக்காரர்கள் மிகவும் நம்பத்தகுந்த கதைகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் காவல்துறை எச்சரிக்கிறது. அவர்கள் தொலைபேசி உரையாடலை நிறுத்த விடாமல் தொடர்ந்து பேச வைத்து, சில நேரங்களில் நிலைத் தொலைபேசி மற்றும் கைபேசி இணைப்புகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் இருந்து பணம் எடுத்துவருமாறு கூறி, வீட்டில் உள்ள தங்கம், நகை போன்ற பொருட்களையும் கொண்டு வரச் சொல்லி, பின்னர் அவற்றை பெற்றுக்கொள்ள சந்திப்பை ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த வகை மோசடிகள் மிகவும் ஆபத்தானவை என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தொலைபேசியில் யாராவது பணம் கேட்பின் எப்போதும் சந்தேகத்துடன் அணுக வேண்டும் என்றும், உறவினர்களின் பெயர்களை தொலைபேசியில் சொல்லக்கூடாது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அவசர நிலை என்று கூறப்பட்டாலும் முதலில் மற்றொரு நம்பகமான உறவினரை தொடர்பு கொண்டு தகவலை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் அறிமுகமில்லாத நபர்களுக்கு பணம் அல்லது மதிப்புள்ள பொருட்களை ஒருபோதும் வழங்கக்கூடாது என்றும், தனிப்பட்ட சொத்துகள் அல்லது வங்கி கணக்கு விவரங்கள் குறித்து தகவல் வழங்க வேண்டாம் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனடியாக 117 என்ற அவசர காவல்துறை எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மோசடி முறைகள் குறித்து குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குறிப்பாக முதியவர்களுக்கு விளக்க வேண்டும் என்றும், அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களை தடுப்பதும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தேவையானவர்கள் தங்களது தொலைபேசி எண்ணை ஆன்லைன் தொலைபேசி பட்டியல்களில் இருந்து நீக்குவதற்கான வாய்ப்பும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Kapo VS





