“கவனச்சிதறல் உயிரைக் காவுகொள்ளலாம்” – மத்திய சுவிட்சர்லாந்து போலீசார் எச்சரிக்கை
“கவனச்சிதறல் உயிரைக் காவுகொள்ளலாம்” – மத்திய சுவிட்சர்லாந்து போலீசார் எச்சரிக்கை

“கவனச்சிதறல் உயிரைக் காவுகொள்ளலாம்” – மத்திய சுவிட்சர்லாந்து போலீசார் எச்சரிக்கை
மத்திய சுவிட்சர்லாந்து போலீஸ் பிரிவுகள் கடந்த மூன்று வாரங்களாக சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் கவனச்சிதறல்களை மையமாகக் கொண்டு சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
“மத்திய சுவிட்சர்லாந்து போலீஸ் கூட்டமைப்பு” வெளியிட்ட தகவலின்படி, இந்த நடவடிக்கையின் போது 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், சுமார் 430 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
“கவனச்சிதறல் உயிரைக் காவுகொள்ளலாம்” என்ற கோஷத்துடன் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரம், இந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் மே 17, 2026 வரை மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. சமூக ஊடகங்கள், விளம்பர பலகைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் இணைந்து, மத்திய சுவிட்சர்லாந்து முழுவதும் குறிவைத்து தீவிர சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

பதிவு செய்யப்பட்ட 27 பேரில் பெரும்பாலானோர் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது ஸ்மார்ட்போன் பயன்படுத்தி செய்தி அனுப்பியதற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதம் மட்டுமின்றி, சாலைப் போக்குவரத்து அலுவலகத்தின் நிர்வாக நடவடிக்கையின் கீழ் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Hands-free வசதி இல்லாமல் வாகனம் ஓட்டிக்கொண்டே தொலைபேசியில் பேசியதற்காக சுமார் 430 பேருக்கு ஒழுங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் மோட்டார் வாகன ஓட்டுநர்களாக இருந்ததுடன், 5 மொபா மற்றும் மிதிவண்டி ஓட்டுநர்களும் அபராதம் விதிக்கப்பட்டவர்களில் இடம்பெற்றுள்ளனர்.
சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வாகனம் ஓட்டும் போது கவனச்சிதறலை ஏற்படுத்தும் செயல்களை தவிர்க்குமாறும், பயணத்தை தொடங்கும் முன்பே Navigation அமைப்புகளை தயார்செய்யுமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், SMS வாசித்தல் அல்லது அனுப்புதல், கைப்பேசியில் பேசுதல் போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அவசர தேவைகள் ஏற்பட்டால் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தி செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
© Zentralschweizer Polizeikonkordat






