துசிஸ் பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் – முதியவர் தீவிர காயம் சுவிட்சர்லாந்தின் Thusis (துசிஸ், கிரௌவுண்டன் கன்டோன்) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 87 வயதுடைய முதியவர் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து Kantonspolizei Graubünden (கிரௌவுண்டன் கன்டோனல் காவல் துறை) தகவல் வெளியிட்டுள்ளது. மாலை சுமார் 4.15 மணியளவில், Compognastrasse பகுதியில் 29 வயதுடைய சுவிஸ் பெண் ஒருவர், எந்த முன்னறிவிப்பும் இன்றி 87 வயதுடைய முதியவரை கத்தியால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவருக்கு உதவி வழங்கியதுடன், தாக்குதல் நடத்திய பெண்ணை காவல்துறை வரும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். காயமடைந்த முதியவர், முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், Rettung Mittelbünden (ரிட்டுங்க் மிட்டெல்வுண்டன் அவசர சேவை) குழுவினரால் Kantonsspital Graubünden (கிரௌவுண்டன் கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்களுக்கு மனநலம் சார்ந்த உதவி வழங்குவதற்காக Care Team அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, தாக்குதல் நடத்திய பெண்ணுக்கும் காயமடைந்த முதியவருக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபரான அந்த பெண் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், மாநில வழக்கறிஞர் அலுவலகம் கொலை முயற்சி குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. சம்பவத்தின் துல்லியமான சூழ்நிலைகள் குறித்து கிரௌவுண்டன் கன்டோனல் காவல் துறையுடன் இணைந்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. © Kapo GR